தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 5000 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 12 ஆண்டுகள் முடிந்த பின்னும்கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது.
மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வளங்கப்படுவது இல்லை. இந்நிலையில், இவர்கள் வாங்கும் 10 ஆயிரம் ஊதியத்தில் குடும்பம் முழுவதும் உணவு, குழந்தைகள் படிப்பு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை என இன்னல்களை சந்தித்து வரும் இவர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க கோரி பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அரசு அலைக்கழிப்பு செய்வது வருகிறது.
இந்நிலையில் வருகிற மே 22 ம் தேதி தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னை டி பி ஐ வளாகம் நடைபெற உள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் பணி நிரந்தர கோரிக்கையை முதன்மையாக கோரிக்கையாக முன் நிறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளை தொடர்ந்து இந்த ஆண்டும் மே மாதம் ஊதியம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூறுகையில் ஒவ்வொரு முறை தங்கள் கோரிக்கை குறித்து போராட்டத்தில் ஈடுபடும்போது போராட்டத்தை கலைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தி பெயர் அளவில் உத்திரவாதங்களை அளித்து, அந்த உத்திரவாதங்களை செயல்படுத்தாமல் தங்களை ஏமாற்றி வருவதாகவும், இம்முறை எங்களுக்கு உரிய தீர்வு எட்டு வரை நாங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.