தமிழ்நாட்டில் வெளியான 11ம் வகுப்பு தேர்வு முடிவில் (TN 10th Results 2023 District Wise Pass Percentage), பாடவாரியாக எதில் மாணாக்கார்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


தேர்வு முடிவுகள்:


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 3,260 தேர்வு மையங்களில் எழுதினர். இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி,  மாநிலம் முழுவதும் 90.93%  மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக மாணவியர் 94.36% அளவிற்கும், மாணவர்கள் 86.99% அளவிற்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.37% அளவிற்கு அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்:



  • அறிவியல் பாடப்பிரிவுகள் - 93.38%

  • வணிகவியல் பாடப்பிரிவுகள் - 88.08%

  • கலைப்பிரிவுகள் - 73.59%

  • தொழிற்பாடப் பிரிவுகள் - 81.60%


முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம்:



  • இயற்பியல் - 95.37%

  • வேதியியல் - 96.74%

  • உயிரியல் - 96.62%

  • கணிதம் - 96.01

  • தாவரவியல் - 95.30%

  • விலங்கியல் - 95.27%

  • கணினி அறிவியல் - 99.25%

  • வணிகவியல் - 94.33%

  • கணக்குப் பதிவியல் - 94.97%


100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்:


11ம் வகுப்பில் மாநிலம் முழுவதும் மொத்தமாக ஆயிரத்து 792 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன. அதில் 162 அரசு மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். தமிழ்நாட்டில் மொத்தம் ஏழாயிரத்து 549 மேல்நிலைப்பள்ளிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


அதிகரித்துள்ள தேர்ச்சி விகிதம்:


கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 11ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 90.07 சதவிகிதமாக இருந்த 11ம் வகுப்பு தேர்ச்சி விகிதம், நடப்பாண்டில் 90.93 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.


மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள்:


11ம் வகுப்பு பொதுத்தேர்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் 5 ஆயிரத்து 709 பேர் எழுதிய நிலையில், அவர்களில் ஐயாயிரத்து 80 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று சிறைவாசிகள் 125 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், 108 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதியிருந்த நிலையில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.


மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகள்:


மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.38% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் 96.18 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் 2வது இடத்திலும், கோயம்புத்தூர் மாவட்டம் 95.73% தேர்ச்சி விகிதத்துடன் மூன்றாவது இடத்திலும்,  நாமக்கல் மாவட்டம் 95.60% தேர்ச்சி விகிதத்துடன் நான்காவது இடத்திலும் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் 95.43% தேச்சி விகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. விருதுநகர் மாவட்டம் 95.19% தேர்ச்சியும், திருநெல்வேலி மாவட்டம் 95.08%  தேர்ச்சியும் , அரியலூர் மாவட்டம் 94.93% தேர்ச்சியும், சிவகங்கை மாவட்டம் 94.85% தேர்ச்சியும் மற்றும் தென்காசி மாவட்டம் 94.14% தேர்ச்சியும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.


அரசு பள்ளிகளில் முதலிடம்:


அரசு பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதத்தில், திருப்பூரில் உள்ள 69 பள்ளிகளில் பயின்ற 94.33% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அதைதொடர்ந்து, ஈரோட்டில் 93.62 சதவிகிதம் அளவிற்கும், நாமக்கல்லில் 92.94 சதவிகிதம் அளவிற்கும், அரியலுரில் 92.31 சதவிகிதம் அளவிற்கும், சிவகங்கையில் 91.17 சதவிகிதம் அளவிற்கும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.