இராமநாதபுரம் மாவடத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 சுவாமி சிலைகளை மதுரை சிலை தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். அதனை அடுத்து, சிலையை விற்க முயன்ற பாஜக நிர்வாகி உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரை சேர்ந்த அலெக்ஸ் என்கிற அலெக்ஸ்சாண்டர் என்பவர் சட்ட விரோதமாக தொன்மையான சுவாமி சிலைகளை விற்க முயற்சி செய்வதாக மதுரை சிலை தடுப்பு பிரிவிற்கு வந்த தகவலை அடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் ஜெயந்த் முரளியின் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், இன்று அலெக்ஸ் என்பவரை காவல் துறை கைது செய்துள்ளது. கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், தன்னிடம் மொத்தம் 7 சிலைகள் இருந்ததாகவும் அவற்றை விற்பதற்காக தன்னிடம் அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன் என்பவரும் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் கொடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில் காவலர் இளங்குமரன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து விசாரித்ததில் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி ஆகிய நால்வரும் சேலம் எடப்பாடி அருகே ஒரு மலை அடிவாரத்தின் அருகில் உள்ள கிராமத்தில் சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று தாங்கள் சிலை தடுப்பு பிரிவு போலீசார் என்று சொல்லிகொண்டு சிலைகளை எடுத்து வந்து அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர் மூலமாக சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் கூரிசேத்தனார் அய்யனார் கோவிலின் பின்புறத்தில் உள்ள கால்வாயில் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவலை அடுத்து, காவல் துறையினர் அங்கு சென்றுள்ளனர். அங்கிருந்து, 2 நடராஜர் சிலைகள், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை என 7 உலோக சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன், பாஜக சிறுபான்மையினர் பிரிவு இராமநாதபுர மாவட்ட செயலாளர் அலெக்ஸ், விருதுநகரைச் சேர்ந்த கருப்பசாமி, திண்டுக்கல் அயுதப்படை காவலர் நாகநரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இருவரை காவல் துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்