CM Stalin: மகாராஷ்ராவில் கிரேன் சரிந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.
கிரேன் சரிந்து விழுந்து விபத்து:
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் கட்டப்படும் பாலத்தின் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் எனப்படும் ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது. திடீரென அந்த ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 20 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்வர்களில் இரண்டு பேர் தமிழகர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் என்பதும், அவர் VSL கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் எனவும் தெரிய வந்துள்ளது.
நிதியுதவி அறிவிப்பு:
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம். போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மேற்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா அரசு ரூ. 5 லட்சமும், மத்திய அரசு ரூ.2 லட்ச நிவாரணமும் அறிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க