சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் விசாரணை 23ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  


மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் (2001-06) வீட்டுவசதி வாரியத்துறையின் அமைச்சராக இருந்தார். 


அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4,90,29,040  அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. 


இந்த வழக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு தொடரப்பட்டது.  இதையடுத்து கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின்  பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.  



அனிதா மீதான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு அரசில் தற்போது அமைச்சராக இருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். அவர்மீதான வழக்கை நடத்தவேண்டியது மாநில அரசுதான். ஆனால், அனிதாவின் நலன்களைக் காப்பதில்தான் மாநில அரசு அக்கறையோடு செயல்படுகிறது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும். எனவே, நீதிமன்ற சட்டப்பிரிவு 301 (2), 302 ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறையை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 


ஆனால் அமலாக்கத்துறையின் வாதத்தை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கவில்லை எனவும் 90 சதவீதம் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் அமலாக்கத்துறையின் உதவி வேண்டாம் எனவும் கூறியதாக தெரிகிறது. ஆனால் அமலாக்கத்துறையிடம் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இருக்கும் ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் அவற்றையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 



இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில்  நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தம், மூத்த மகன் ஆனந்த பத்மநாபன் ஆகியோர் ஆஜராகவில்லை. இளைய மகன்கள் ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன் மட்டும் ஆஜராகினர். 


இவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுமுறையில் உள்ளதால் விசாரணை 23ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே அமைச்சர் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறையின் விசாரணை வலையத்தில் சிக்கியுள்ள நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் சிக்குவாரா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.