தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின்போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ரயிலில் வழக்கமாக கூட்டம் நிரம்பி வழியும் என்பதாலும் டிக்கெட்டுகள் இல்லாத காரணத்தாலும் மக்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் பேருந்தில் எந்த ஒரு சிரமமுமின்றி மக்கள் சௌகரியமாக பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் நாளை வார இறுதி நாள் என்பதாலும், வரும் திங்கள் விநாயகர் சதுர்த்தி என்பதாலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. வெள்ளிகிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, திங்கள்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப் 16, 17, 18) மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் பயணம் சுலபமாகும் வகையில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக செப் 15 ஆம் தேதி தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 650 சிறப்பு பேருந்தும், செப் 16 ஆம் தேதி கூடுதலாக 200 பேருந்தும் இயக்கப்பட உள்ளன.
அதே போல கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து பிற முக்கிய இடங்களுக்கும்,
பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செப் 18 ஆம் தேதி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்க பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.