அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்லலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற நிலையை மாற்றி, முதன் முதலாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டம் இயற்றினார். 1970ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால், திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த சூழலில் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக 2021 மே மாதத்தில் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தின்கீழ் 51 பேருக்குப் பணி ஆணைகளை வழங்கினார். 


அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. அதில், அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் படிக்க மாநிலம் முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், 22 பேர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 3 பேர் பெண்கள் ஆவர். 


இவர்கள் தற்போது பயிற்சியை முடித்து அர்ச்சகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சிதா, ரம்யா, கிருஷ்ணவேணி  ஆகிய 3 பெண்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் கோயில்களில் சில காலம் பயிற்சி பெறுவார்கள். காலிப் பணியிடங்கள் ஏற்படும்போது இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அரசுப் பணி அளிக்கப்படும். இந்த ஆண்டில் 15 பெண்கள் புதிதாகப் பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.






இந்த நிலையில் கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்லலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.


ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்லலாம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.