ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை வெண்ணிலா தம்பதியினருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வெண்ணிலாவிடம் பேச்சு கொடுத்தவாறு குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருப்பதாக கூறி கண் மருத்துவரை பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். 



அப்போது பெற்றோரின் கவனத்தை திசை திருப்பி விட்டு அப்பெண் குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மருத்துவமனை வளாகத்தில் இருந்து முககவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்தி செல்லும் புகைப்படம் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை விரைந்து மீட்க சேலம் மாநகர காவல்துறையினர் பிரதான சாலைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். மேலும், சேலம் மாநகர காவல் துறை சார்பில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. 


தினசரி 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் பிறந்து ஐந்து நாட்களை ஆன ஆண் குழந்தை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



இந்த நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்தேகத்திற்கு இடமாக குழந்தையுடன் வந்த பெண்ணை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அரசு மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் வினோதினி என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு சேலம் மாநகர காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தனக்கு குழந்தை இல்லாததால் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தையை எடுத்து வந்ததாக கைது செய்யப்பட்ட வினோதினி பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வினோதினியை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட வினோதினியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து காணாமல் போன குழந்தை 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் வழங்கப்பட்டது பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.