Travel With ABP: சுவிட்சர்லாந்து செல்லும் சுற்றுலா பயணிகள், இந்த ஆச்சரியமான அனுபவத்தை பெற முடியும்.
10 நொடிகளில் 3 நாடுகளுக்கு பயணம்:
புது இடங்களை பார்க்க வேண்டும், பல்வேறு இன, மொழி மற்றும் கலாச்சாரங்களை அறிய வேண்டும் என்பவர்கள் சுற்றுலா பயணிகளாக சுற்றி திரிகின்றனர். அப்படிப்பட்டவர்கள்,ஒரே பயணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளைப் பார்க்க விரும்பினால், அவர்களுக்கு ஏற்ற ஒரு தனித்துவமான அனுபவம் காத்திருக்கிறது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இடம் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசல் நகரமாகும். இது சரியாக சுவிட்சர்லாந்து, ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளின் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது. அதன் மூலம், பார்வையாளர்களுக்கு பத்து வினாடிகளில் மூன்று நாடுகளை கடக்கும் ஒரு அரிய மற்றும் ஆச்சரியமான வாய்ப்பை வழங்குகிறது. இது ஐரோப்பாவில் உள்ள சுற்றுலாப் பயணிகளை கவரும் அதிசயங்களில் ஒன்றாகும். பசால் நகரைன் புறநகர் பகுதிகள் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளிலும் நீண்டுள்ளது.
சுவாரஸ்யமான சர்வதேச சந்திப்பு:
சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை ஒன்றாகக் காட்டும் ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பாசல் நகரம் ஒரு தனித்துவமான அமைவிடத்தை ஆக்கிரமித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு அசாதாரணமான ஆனால் அற்புதமான வாய்ப்பாக, கிட்டத்தட்ட அடுத்த்டுத்து மூன்று நாடுகளுக்குள் பயணிக்க உதவுகிறது. புவியியல் தனித்துவத்தைத் தவிர, பாசல் சுவிட்சர்லாந்தின் கலாச்சாரத்திற்கான முக்கிய இடங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. ஓல்ட் டவுன் என்று அழைக்கப்படும் பாசலின் இடைக்காலப் பகுதி, கோப்ஸ்டோன் தெருக்கள் மற்றும் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறும் புகழ்பெற்ற கார்னிவல் ஆஃப் பாசெல் ஆகியவற்றிற்காக பிரபலமான இடமாக உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நகரம், மூன்று நாடுகளின் கலாச்சாரமும் சங்கமிக்கும் இடமாக உள்ளது.
பயண செலவும் சொற்பமே..!
பாசல் அருகிலுள்ள நகரங்கள் மற்றும் இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும், வகையிலான இணைப்புகளை கொண்ட ஒரு சிறந்த நகரமாகும். சுவிட்சர்லாந்து வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நாடாக இருந்தாலும், மிக குறைந்த பட்ஜெட்டிலேயே பாசலை முழுமையாக சுற்றி பார்க்க முடியும் என கூறப்படுகிறது. சரியான திட்டமிடலுடன் சென்றால் மிக சொற்ப செலவிலேயே வாழ்வின் சிறந்த அனுபவத்தை பெற முடியும் என பல டிராவல் பிளாகர்கள் கூட பரிந்துரைத்துள்ளனர்.
மற்ற சுற்றுலாத் தலங்கள்:
பாசல் நகர மக்கள் பெரும்பாலும் ரைன் நதி வழியாக வேலைக்கு அல்லது நகரத்தை சுற்றி வருகிறார்கள். உண்மையில், நல்ல வானிலையில், உள்ளூர்வாசிகள் ஆற்றில் மிதப்பதை அடிக்கடி காணலாம். அத்தகைய பயண பாணியை அடைய விரும்புவோருக்கு சிறப்பு நீர்ப்புகா பைகள் உள்ளன. பாசல் நகரில் உள்ள உணவுகள் மற்றும் குளிர்பானங்கள், உங்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்கும். அடுக்கடுகாக நெருக்கி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பனி விழும் பொழுதுகள் நெருக்கமானவர்களுடன் பொழுதை கழிக்க பாசல் நகரை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.