சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ளது குரால் நத்தம். இந்த பகுதியில் ஜருகுமலை அமைந்துள்ளது. குரால் நத்தம், சூரியூர் மற்றும் கம்மாளப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசித்து வரும் மக்கள் விவசாயம் மட்டுமின்றி, தாங்கள் வளர்த்து வரும் நாட்டு இன மாடுகளை ஜருகுமலை மற்றும் பனமரத்துப்பட்டி ஏரியில் மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் சுமார் 30 முதல் 50 மாடுகள் வரை பட்டி அமைத்து அவற்றை தங்கள் விவசாய நிலங்களில் பராமரித்து வருகின்றனர்.



 நாட்டு இன மாடுகள் என்பதால் அவற்றிலிருந்து பெறப்படும் பால் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை ஆவதால் நுகர்வோர் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து பாலை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் ஏழை விவசாயிகள் தங்கள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாங்கள் வளர்க்கும் நாட்டு இன பட்டி மாடுகள் அடிக்கடி காணாமல் போவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காலையில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் மாடுகளை மாலையில் எண்ணிப் பார்க்கும்போது குறைந்து போவது குறித்து அவர்கள் கவலை அடைந்தனர். இது தொடர்பாக மேய்ச்சலுக்கு மாடுகள் செல்லும் பாதையில் விவசாயிகள் சென்று பார்த்தபோது காணாமல் போன மாடுகளின் தலை கால் மற்றும் வீசி எறியப்பட்ட இறைச்சித் துண்டுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



இதுதொடர்பாக பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் பட்டி மாடு வளர்ப்போர், 10 ஆண்டுகளாக தொடர்ந்து பட்டி மாடுகளை குறிவத்து கயிறு மூலம் கண்ணி வைத்து மாடுகளை பிடித்து பனமரத்துப்பட்டி ஏரிக்குள் வைத்து வெட்டி அவற்றை மாட்டிறைச்சி கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர். ஒவ்வொரு மாடும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மதிப்பு உள்ளது. இதுவரை 15 மாடுகளை அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவர் கண்ணி வைத்து பிடித்து, ஏரிக்குள் வைத்து கொன்று இறைச்சியாக மூட்டை கட்டி விற்பனை செய்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டு ரக மாட்டினங்கள் அழிந்து வரும் சூழலில் இதுபோல் இறைச்சிக்காக கடத்தப்பட்டு மாடுகள் வெட்டி விற்பனை செய்யப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண