தமிழக-கர்நாடகா மாநிலங்களில் எல்லையான மேட்டூர் அடுத்துள்ள பாலாறு என்ற வனப் பகுதியில் தமிழக மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14 ஆம் தேதி இரண்டு பரிசல்களில் மூன்று பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அதில் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த மீனவர்கள் பாலாற்றின் வழியாக சென்றுள்ளனர். பரிசலில் சென்றவர்கள் ஊர் திரும்பிய நிலையில், கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஊர் திரும்பவில்லை. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் பாலாறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தப்பி வந்த மீனவர்கள் கூறியுள்ளனர்.



இதற்கிடையே, கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கர்நாடகா வனப்பகுதியில் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அதனைக் கண்டு கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியை வான் நோக்கி மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கி சத்தம் கேட்டு வேட்டையாட வந்தவர்கள் ஓடி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து இரண்டு பரிசல், இரண்டு மான் இறைச்சி மற்றும் டார்ச் லைட்டை கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காணாமல் போன ராஜாவின் உடல் காவிரி ஆற்றில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் ராஜாவின் உடலை பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தமிழகம் கர்நாடக எல்லையான பாலாறு வழியாக இரு மாநில போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதுகுறித்து ராஜாவின் மனைவி ஏபிபி நாடு-க்கு அளித்த பேட்டியில், “செவ்வாய்க்கிழமை மதியம் மீன் பிடிக்கச் சென்ற தன் கணவரை கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கர்நாடகா வனத்துறையினர் கடுமையாக தாக்கியதில் தனது கணவர் உடலில் பல காயங்கள் உள்ளது . எனவே, கர்நாடகா வனத்துறை மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கும் முன்பு இதேபோன்று தங்கள் ஊரில் மற்றொரு நபரை கர்நாடகா வனத்துறையினர் தாக்கினர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று இதையும் நாங்கள் விடப் போவதில்லை. நடவடிக்கை எடுக்கப்படாமல் உடலை வாங்க மாட்டோம்” என தெரிவித்தார்.