துப்பாக்கிச் சூடு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு-கர்நாடகா எல்லை பகுதி அமைந்து இருக்கிறது. அங்குள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடிப்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை 4-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மீனவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனை அடுத்து, தமிழக மீனவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அதில் ஒரு மீனவரை மட்டும் காணவில்லை என்று கூறப்படுகிறது. சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த மீனவர் ராஜா என்பது தெரிந்தது.
இதனால் கிராம மக்கள் பாலாற்றிலும், பாலாறு வனப்பகுதியிலும் மினவர் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். தமிழ்நாடு மீனவர்கள் உயிர் பிழைப்பதற்காக பாலாற்றில் விட்டுச் சென்ற அவர்களின் பரிசல்கள் மற்றும் மீன்பிடி வலைகளையும் கர்நாடக வனத்துறை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கர்நாடகா வனப்பகுதியில் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அதனைக் கண்டு கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியை வான் நோக்கி மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து இரண்டு பரிசல், இரண்டு மான் இறைச்சி மற்றும் டார்ச் லைட்டை கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
உடல் மீட்பு
துப்பாக்கி சூடு நடத்தியதில் தப்பி சென்றதாக கூறப்பட்ட மீனவர் ராஜா என்பவரின் உடல் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் மிதந்த உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து, ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தமிழக கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் பழக்கத்தைவிட அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாலாறு வழியாக தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாலாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது