தமிழக கர்நாடகா மாநிலங்களில் எல்லையான மேட்டூர் அடுத்துள்ள பாலாறு என்ற வனப் பகுதியில் தமிழக மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14 ஆம் தேதி இரண்டு பரிசல்களில் மூன்று பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அதில் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த மீனவர்கள் பாலாற்றின் வழியாக சென்றுள்ளனர். பரிசலில் சென்றவர்கள் ஊர் திரும்பிய நிலையில், கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஊர் திரும்பவில்லை. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் பாலாறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தப்பி வந்த மீனவர்கள் கூறியுள்ளனர்.



இதற்கிடையே, கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கர்நாடகா வனப்பகுதியில் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அதனைக் கண்டு கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியை வான் நோக்கி மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து இரண்டு பரிசல், இரண்டு மான் இறைச்சி மற்றும் டார்ச் லைட்டை கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.



மேலும், காணாமல் போன ராஜா என்பவரை கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டார்களா, அல்லது கைது செய்து அழைத்துச் சென்றார்களா என்பது குறித்து தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ராஜாவை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் பழக்கத்தைவிட அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பாலாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.