தருமபுரி மாவட்டம் தொப்பூர் பேருந்து நிலையம் அருகே சாலை சந்திப்பு பகுதியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காகவும், வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காகவும், அடுத்தடுத்து பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் வருகின்ற அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் வந்தாலும், தொப்பூர் பேருந்து நிலையம் பகுதியை கடக்கும் போது வேகத்தை குறைத்து மிக குறைந்த வேகத்திலேயே செல்ல அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு  இரும்பு ரோல்களை ஏற்றி வந்த லாரியை, ஓட்டுநர் ராஜி என்பவர் இயக்கி வந்தார். தொடர்ந்து இந்த லாரி தருமபுரி-சேலம் தேசிய  சாலையில் வந்து கொண்டிருந்த  போது, தொப்பூர் பேருந்து நிலைய சாலை சந்திப்பு அருகே அமைக்கப்பட்ட பேரி கார்டு பகுதியில் வளைவான இடத்தை கடக்கும் போது, அதிவேகமாக வந்ததால், ஓட்டுநரால் லாரியை கட்டுப்படுத்த முடியாவில்லை. 

 



 

தொடர்ந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தொப்பூர் பேருந்து நிலைய சாலை சந்திப்பிலேயே தலை குப்புற கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் ராஜி சிறு காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் லாரியில் இருந்த இரும்பு ரோல்கள் சாலையில் உருண்டு விழுந்தது. மேலும் லாரி சாலையின் குறுக்கே விழுந்ததால், தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் வரவழைத்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த லாரி மற்றும் இரும்பு ரோல்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.



 

இந்த விபத்தால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் பல்வேறு வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அரிசி லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.