தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேவுள்ள நார்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவி என்பவரின் மனைவி தேன்மொழி (34) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோகன் (30) என்பவர், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இப்பொழுது இருவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தேன்மொழியும், அசோகனும் அடிக்கடி சந்தித்து, தனிமையில் இருந்துள்ளனர். 

 



 

இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தேன்மொழி, கடந்த 26 ஆம் தேதி, முத்தம்பட்டி வனப்பகுதியில், ஐயப்பன் கரடு என்ற இடத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் அவர் அணிந்திருந்த தேடி, தாலி உள்ளிட்ட தங்க நகைகள் மாயமாகி இருந்தது.  இது தொடர்பான விசாரணையில் தேன்மொழியை திட்டமிட்டு கொலை செய்து, நகைகளை திருடி சென்றுள்ளதாக காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து  அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது தேன்மொழியின் செல்போனுக்கு அதிகமாக யார் பேசினார்கள் என ஆய்வு செய்தனர். இதில் பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத கூலித் தொழிலாளியான அசோகன் (30) என்பவர் அடிக்கடி, தேன்மொழியிடம் பேசியது  தெரியவந்தது. 

 

இதனையடுத்து அசோகனை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்பொழுது அசோகன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த தேன்மொழியும்,  அசோகனும்  தனியார் கம்பெனி ஒன்றில் பணி செய்தபோது பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.  இவர்கள் இருவரும் அடிக்கடி மறைவான இடத்தில் தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஆனால் குடி பழக்கமும், சூதாட்டம் ஆடி வந்துள்ளார். இந்நிலையில் வருவாய் இல்லாததால், பணம் தேவைக்காக தேன்மொழியின் தங்க நகைகளை பறிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தேன்மொழியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வரவழைத்துள்ளார். 

 

தொடர்ந்து தேன்மொழியை முத்தம்பட்டி வனப் பகுதியில், ரயில் தண்டவாளத்தை தாண்டி, ஐயப்பன் சரடு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது குளிர்பானம் வாங்கி, அதில் தூக்க மாத்திரைகளை போட்டுள்ளார். தொடர்ந்து வனப் பகுதிக்குள் செல்லும் போது, தேன்மொழியை குளிர்பானத்தை குடிக்க வைத்துள்ளார். அப்பொழுது ஓரிடத்தில் அமர்ந்து பேசியபோது திருமணம் பற்றி பேசி இருவருக்கும் விவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அசோகன் தேன்மொழியை அடித்துள்ளார். இதில் தேன்மொழி மயங்கி விழுந்துள்ளார். அந்த நேரத்தில், தேன்மொழி அணிந்திருந்த தோடு, கழுத்து செயின் உள்ளிட்ட 6 சவரன் தங்க நகைகளை கழற்றி கொண்டு, உயிரோடு இருந்தால், வெளியில் சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில், அவருடைய சேலையிலே கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானதாக அசோகன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அசோகனை கைது செய்து, 6 சவரன் தங்க நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தங்க நகைக்காக திருமணம் செய்து கொள்வதாக கூறி, கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.