ஆயுத பூஜையை ஒட்டி சேலம் பூ மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம். விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு அதிக அளவில் குவிந்த கூட்டம் மீண்டும் நோய்த் தொற்று பரவும் அச்சம்.



சேலம்  மாநகரில் பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் காலை முதலே ஆயுத பூஜை கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தற்காலிகமாக அமைந்துள்ள வ.உ.சி பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். அரசின் தீவிர நடவடிக்கையால் சற்று குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு இப்பகுதியில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்களால் மீண்டும் நோய்த் தொற்று பரவும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர் பண்டிகை காரணமாக பூக்களின் விலையும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட குண்டுமல்லி இன்று 800 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாமந்தி 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முல்லை பூ 700 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 240 ரூபாய்கும், காக்கட்டான் 450 ரூபாய்க்கும், அரளி 320 ரூபாய்க்கும், நந்தியாவட்டம் 320க்கும், விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.



மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் நோய் தடுப்பு அறிவிப்புகளை அறிவித்த போதிலும் பொதுமக்கள் காதில் வாங்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அச்சம் ஏற்பட்டுள்ளது.  இதுமட்டுமின்றி நேற்று வெளியூர்களுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள் 4 நாட்கள் விடுமுறை என்பதால் சேலம் திரும்பினர். பேருந்துகளில் நிற்க கூட இடமில்லாமல் பலர் படியில் தொங்கியபடி சேலம் வந்தடைந்தனர். அரசு சிறப்பு பேருந்துகள் செயல்பட்டாலும் ஆம்னி பேருந்துகளின் அதிக விலையால் மக்களின் கூட்டம் அரசு பேருந்து பக்கம் திரும்பியது கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பேருந்துகளை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா நோய் தொற்று கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. மக்களின் இந்த அலட்சியத்தினால் நோய் தொற்று மீண்டும் பெருமளவில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசு அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


திருவண்ணாமலையில் நடந்த பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம் - பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்


பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து உரிமையாளர் கொலை - தாத்தா, பேரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு