வடகிழக்கு பருவமழை வரவுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் முழுமையான தகவல்கள் இல்லாமல் பங்கேற்றதால் உயரதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர்.



மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட  பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் வேறுபட்ட புள்ளி விவரங்களின்   தகவல்களை கூறியதால் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஒரு மாதமாக காலமாக நீர் வரத்து கால்வாய்கள் மற்றும் தண்ணீர் அதிகம் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து பருவ மழை காலத்தை முன்னெச்சரிக்கையாக கையாள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் எந்த பணிகளையும் முடிக்காமல் பெரும்பாலான பணிகள் கிடப்பில் வைத்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கண்காணிப்பு அலுவலர் தற்போது பெய்து வரும் மழையில் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது மேலும் கனமழை பொழியும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையும் எனவே அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என காட்டமாக பேசினார்.



அதனைத் தொடர்ந்து வேண்டிய முன்னெச்சரிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் அணையின் நீர்மட்டம், கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரசு முதன்மைச் செயலாளர் நீரஜ்குமார், தெரிவிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை எந்த ஒரு பாதிப்பும் இருக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளதாகவும், அதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 56 இடங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 



இதில் தேவைப்படும் அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மழைநீரை சேகரிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,121 பண்ணை குட்டை அமைத்திருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தீரும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் திருவண்ணாமலை மாவட்டம் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். சாத்தனூர் அணையின் மதகுகளை சீரமைக்க ஒரு வருடம் ஆகும் என்றும்   அதற்காக சாத்தனூர் அணையில்   99 அடி அளவிற்கு அணையின் தண்ணீரை சேமிக்கலாம் என்று அவர்  தெரிவித்தார்.