மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் வயநாடு பகுதி மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில்  கடந்த மூன்று நாட்களாக  தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்துள்ளது. இதையடுத்து கபினி அணையில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் நேற்று  7,221 கன அடியில் இருந்து   இன்று காலை 11,667  கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிருஷ்ணராஜ சாகர் அணையின்  மொத்த கொள்ளளவான 124.80 அடியில், தற்போது நீர் மட்டம் 116.44 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வரும் நீர்வரத்து 14,052 கன அடியாக அதிகடித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு  9,679 கன அடியாக உள்ளது.

 



 

இதேபோல் கபிணி அணையின்  மொத்த கொள்ளளவான 84.00 அடியில்,  தற்போது நீர் மட்டம் 83.45 அடியாக உள்ளது. மேலும் அணைக்கு வரு  நீரின் அளவு நேற்றை விட சற்று அதிகரித்து, வினாடிக்கு 12,014 கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் வினாடிக்கு  7,921 கன அடியில் இருந்து அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 11,667 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி  நீரின் அளவு வினாடிக்கு 17,651 கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு  21,346 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. 

 



 

இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் தமிழக எல்லயான  பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து கடந்த 10 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,000 கன அடியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மழை பகுதியை ஒட்டியுள்ள கேரள மாநிலம் பெய்த மழையால், நேற்று கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து அதிகரித்து, வினாடிக்கு  17,651 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று மாலை அல்லது நாளை காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று காவிரி ஆற்றில் நீர்திறப்பு வினாடிக்கு 21,346 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்கும். இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.