அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஓபிஎஸ் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை டிடிவி தினகரன் மற்றும் சசிகலா தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர். இச்சூழலில் இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதிமுக உட்கட்சி பூசல்:
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக்கியுள்ளது. அதே நேரம் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆனால் அக்கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனை, இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா என்ற அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொண்டர்களை சோர்வடைய வைத்து வருகிறது. ஒரு புறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்
இதையும் படிங்க: TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
மறுபுறம் எப்படியாவது அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று சசிகலா, வைத்திலிங்கம், ஓபிஎஸ் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர்.
வைத்திலிங்கத்தை சந்தித்தல்:
இந்த நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அவரது வீட்டிற்கே சென்று டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தான் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதோ இந்த சந்திப்பின் பின்னணி தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த வருடம் திருமணவிழாவிற்கு சென்ற சசிகலா வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து டிடிவி தினகரனின் அமமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் கலந்து கொண்ட நிலையில் அப்போது அது அதிமுகவினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதையும் படிங்க: Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
ஒரு அணியில் அதிமுக:
இந்த சூழலில் தான் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் வைத்திலிங்கத்தை டிடிவி தினகரன் மற்றும் சசிகலா சந்தித்துள்ளனர். உடல் நலம் குறித்து விசாரிக்கத்தான் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொன்னாலும் அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான சந்திப்பு தான் இது என்று கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அதற்கும் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவதற்கான முயற்சி தான் இது என்று தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியோ அதிமுக ஒன்றிணைந்தால் மகிழ்ச்சி தான் என்று அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.