தெலுங்கானா ஆளுநராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் திருநெல்வேலி அருகே உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பொது சிவில் சட்டம், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தமிழக காவல் நிலையங்கள் பற்றி ஏராளமான கருத்துக்களை கூறினார். ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்திரராஜன் அரசியல் கருத்துக்களை கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.


அரசியல் பேசக்கூடாது:


இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவர் கூறியதாவது, “ தமிழக ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் என்னைவிட மகிழ்ச்சியாக யாரும் இருக்க முடியாது. ஏனென்றால், தி.மு.க. வண்டவாளங்கள், தண்டவாளங்கள் வெளியே வரும். ஆனால், சந்திக்கக்கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.


ஏனென்றால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளுநர் தி.மு.க.வை தாக்கி பேசுவார் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆளுநர் அவரது கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும். தேவையான காலத்தில் 6 மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஆளுநர் பேட்டி அளிப்பார்கள். அதுவும் எழுத்துப்பூர்வமாகவே.


தவறான மரபு:


அப்படித்தான் ஆளுநர்கள் இத்தனை காலம் இருந்துள்ளனர். அப்படித்தான் இருக்க வேண்டும். நான் மற்ற ஆளுநர்களை பற்றி கருத்து கூற விரும்பவில்லை. ஒவ்வொரு ஆளுநருக்கும் ஒரு ஸ்டைல். ஆளுநர் பத்திரிகையாளரை சந்திப்பது தவறான மரபை உருவாக்கி விடும். தி.மு.க. தவறு செய்வதை பா.ஜ.க. விமர்சிப்பது வேறு, ஆளுநர் விமர்சிப்பது வேறு.


சட்டசபையில் விமர்சித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது. தினம், தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து என்னைப் போல பேச ஆரம்பித்தால் ஆளுநர் பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும். ஆளுங்கட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி. மக்கள் மன்றத்தில் விமர்சிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. ஆளுநர் விமர்சித்தால் மரபு சரியாக இருக்காது.”


இவ்வாறு அவர் பேசினார்.


மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், தெலங்கானா, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் அம்மாநில ஆளுநர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருவது அம்மாநில அரசுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறது.


குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு அடிக்கடி அரங்கேறி வருவது தமிழக மக்களின் நலனுக்கு ஆரோக்கியமற்றது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அண்ணாமலை ஆளுநர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: “மாமன்னன் ஓடுனா என்ன ஓடலனா என்ன? தனபாலை தள்ளிவிட்டவர்கள்தான் திமுகவினர்” - இபிஎஸ் சரவெடி பேச்சு!


மேலும் படிக்க: Modi Surname Case: ”மோடி குடும்ப பெயர் வழக்கு” - ராகுல் காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது - ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு