மாமன்னன் படம் மூலம் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தி இருப்பதாக கூறும் திமுக, சபாநாயகராக இருந்த தனபாலை கீழே தள்ளி அவமதித்தனர் என எடப்பாடி கடுமையாக விமர்சித்துள்ளார். 


ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான  இலட்சினையை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வதற்காக கர்நாடகாவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி செயல்படுவதாகவும், காங்கிரசும், திமுகவும் கூட்டணியில் இருக்கும்பட்சத்தில், அம்மாநில அரசுடன் மு.க.ஸ்டாலின் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார். கூட்டணியான காங்கிரஸ் அரசுடன் பேசி ஏன் தமிழகத்துக்கு கிடைக்க கூடிய காவிரி நீரை முதலமைச்சர் பெற்று தரவில்லை என்றும் சாடினார்.


தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் காவிரியும், மேகதாது பிரச்சனையும் தலைத்தூக்கி இருக்கும் நிலையில், இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முதலமைச்சர் அமைதி காப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்ற விமர்சித்தார்.


இதுமட்டுமில்லாமல் திமுகவுக்கு நிர்வாக திறன் இல்லை என சாடிய எடப்பாடி பழனிச்சாமி, அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்து ஒரு குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளது. சளிக்கு சிகிச்சைபெற மருத்துவமனைக்கு சென்றால் நாய்க்கடி ஊசி போடுகிறார்கள். இந்த அளவுக்கு திமுகவின் ஆட்சியும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் செயல்பாடுகளும் உள்ளது என விமர்சித்தார். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி என தங்களையே புகழ்ந்து கொண்டு இருப்பதாக சாடிய இபிஎஸ், கும்பகர்ணன் போன்ற தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழுத்து எழுந்திருக்க வேண்டும் என்றார். 


மாமன்னன் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ”ரெட் ஜெயிண்ட் மூலம் மூவிஸ் எடுக்கும் குட்டி அமைச்சர் என உதயநிதி ஸ்டாலினை கிண்டலடித்தார். நாட்டில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயந்துள்ளது.  அதுபற்றி எல்லாம் கவலை இல்லாம, மாமன்னன் பற்றி விமர்சனங்களை கூறி வருகிறார்கள். மாமன்னன் படம் ஒடினால் என்ன...ஓடாவிட்டால் என்ன...? அமைச்சருக்கு அதுவா முக்கியம்..? என கேள்வி எழுப்பினார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திரையில் எழுச்சி ஏற்பட்டதாக பேசுகிறார்கள். அது முழுவதும் பொய் என்ற இபிஎஸ், தான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றபோது, சட்டப்பேரவையை சபாநாயகர் தனபால் கூட்டியதாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த அவரை, சபாநாயகர் இருக்கையில் இருந்து திமுகவினர் இழுத்து கீழே தள்ளினர் என்றார். 


புனிதமான இருக்கையான சபாநாயகர் இருக்கையில் இருந்து தனபாலை அகற்றிவிட்டு அதில், அதில் அமர்ந்தவர்கள் தான் திமுகவினர் என்ற இபிஎஸ், இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்தார்கள்..? இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பவர்கள்..? என கேள்வி எழுப்பினார். மாமன்ற தலைவர் பதவியில் இருந்த தனபாலின் சட்டையை கிழித்து அவமதித்ததுடன், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மாமன்ற தலைவர் பதவியில் இருந்து தனபாலை கீழே இறக்கி விட்டதுடன், சட்டமன்ற உறுப்பினர்களுடன் அமர வைத்தவர்கள் தான் திமுக என்றார். 


இறுதியாக அனைத்து சாதியினரும் ஒன்றே என்ற கொள்கையை பின்பற்றும் கட்சி அதிமுக மட்டுமே என்ற எடப்பாடி பழனிசாமி, அனைத்து சாதியினரையும் ஆதரிக்கும் என கூற வேற எந்த கட்சிக்கும் தகுதி இல்லை என்றார்.