இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போவது யார்? என்பதை இந்த தேர்தல் தீர்மானித்துவிடும்.


மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு:


முதற்கட்டமாக 102 தொகுதிகளிலும் இரண்டாவது கட்டமாக 88 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. முதல் இரண்டு கட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.


இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 12 மாநிலங்களில் 93 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது, 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது.


அஸ்ஸாமில் அதிகபட்ச வாக்குப்பதிவு:


பின்னர், மத்திய பிரதேசத்தில் உள்ள பேதுல் மக்களவை தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனவே, மொத்தம் 95 தொகுதிகளுக்கு நடைபெறவிருந்தது. ஆனால், ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் - ரஜோரி தொகுதிக்கு வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டதாலும் குஜராத்தில் உள்ள சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர்களை தவிர அனைத்து வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுவை திரும்ப பெற்றதால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டதாலும் அந்த இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறவில்லை.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முதற்கட்ட தகவல்களின்படி, இன்றைய வாக்குப்பதிவில் மொத்தம் 60.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வாக்குப்பதிவு நிலவரம்:


அஸ்ஸாமில் 75.01 சதவிகித வாக்குகளும் பீகாரில் 56.41 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் 66.93 விழுக்காடு வாக்குகளும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் 65.23 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது. கோவாவில் 73.10 சதவிகித வாக்குகளும் குஜராத்தில் 55.86 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.


கர்நாடகாவில் 66.29 சதவிகித வாக்குகளும் மத்திய பிரதேசத்தில் 62.51 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 53.90 சதவிகிக வாக்குகளும் உத்தர பிரதேசத்தில் 56.48 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் 73.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


இன்றைய தேர்தலில், மொத்தம் 1,300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.


இதையும் படிக்க: சூரத், இந்தூரை தொடர்ந்து புரியிலும் பாஜக பார்முலாவா? தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் வேட்பாளர்!