இந்தியாவையும் இந்தியாவில் நடக்கும் மக்களவை தேர்தலையும் புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாக கட்டுரை ஒன்று பகிரப்பட்டு வருகிறது. 


கட்டுரையை பகிர்ந்தது யார்?


சமூக வலைதள பயனர்கள் பலர், இந்த கட்டுரையை பகிர்ந்து வருகின்றனர். புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, நியூயார்க் டைம்ஸ் கட்டுரை எனக் கூறி இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவை 20க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இது உண்மையா? என்பதை உறுதி செய்யுமாறு பலர் கேட்டிருந்தனர்.




உண்மை என்ன?


இது தவறான செய்தி. நியூயார்க் டைம்ஸ் அப்படி எதுவும் கட்டுரை வெளியிடவில்லை. ஆனால், கிரண் பேடியின் கமெண்ட் செக்சனில் இந்த கட்டுரையானது 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். இதை அடிப்படையாக வைத்து கொண்டு, இணையத்தில் சில முக்கியமான வார்த்தைகளை போட்டு தேடினோம்.


"v mitchell new york times 2009 india elections" என்ற keywordகளை போட்டு தேடியபோது, "As Elections Near, Tightrope Awaits in India" என்ற பெயரில் ஒரு கட்டுரை கிடைத்தது. இது, 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையாகும்.


வரவிருக்கும் தேர்தல்கள் குறித்தும், பிரசாரத்தின் போது காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் மேற்கொள்ளும் பல்வேறு வகையான உத்திகள் குறித்தும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சோமினி சென்குப்தா என்பவர், இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.




அந்த கட்டுரையின் கமெண்ட் செக்சனில் இந்தியா குறித்தும் அதன் தேர்தல் குறித்தும் V Mitchell என்பவர் தனது கருத்துகளை பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. கிரண் பேடி பகிர்ந்த வைரல் பதிவில், V Mitchell எழுதிய கமெண்ட் அப்படியே இருந்தது. எனவே, கிரண் பேடி பகிர்ந்தது V Mitchell என்பவரின் கமெண்ட் என்பது தெரிகிறது. அது, நியூயார்க் டைம்ஸ் கட்டுரை அல்ல. வைரலான பதிவு தவறான தகவல் என்பது தெரிய வருகிறது.


முடிவு:


நியூயார்க் டைம்ஸ் கட்டுரையின் கமெண்ட் செக்சனில் இடப்பட்ட கமெண்டை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை என தகவல் பரப்பப்பட்டு வருகிறது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக The Quint என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.