பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, முதற்கட்ட வாக்குப்பதிவும் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது. இதையடுத்து வரும் 7ஆம் தேதி, மூன்றாவது கட்டமாக 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.


போட்டியிலிருந்து பின்வாங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்:


தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், இந்த முறை பாஜக ஆட்சி அமைத்தால் அடுத்த முறை தேர்தலே இருக்காது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து குற்றம் சாட்டி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், குஜராத் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.


மத்திய பிரதேசம் இந்தூர் தொகுதியில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தன்னுடைய வேட்புமனுவை வாபஸ் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மட்டும் இன்றி குறிப்பிட்ட அந்த இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து  விலகினர். இதனால், சூரத், இந்தூர் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.


இந்த நிலையில், ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் தன்னுடைய வேட்புமனுவை இன்று திரும்ப பெற்றுள்ளார். தேர்தலில் போட்டியிட போதுமான நிதி இல்லை எனக் கூறி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொஹந்தி, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.


புரியிலும் பாஜக பார்முலாவா?


இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "புரியில் வெற்றிப் பிரச்சாரத்தை மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்துவதே நிதி நெருக்கடிதான். கட்சி நிதி இல்லாமல் புரியில் பிரச்சாரம் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, புரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விலகுகிறேன்.


நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தேன். அதற்கு முன்பு, மாத சம்பளம் வாங்கும் பத்திரிகையாளராக பணிபுரிந்தேன். புரியில் எனது பிரச்சாரத்திற்கு என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துள்ளேன்.


முற்போக்கு அரசியலுக்கான எனது பிரச்சாரத்திற்கு ஆதரவாக பொது மக்களடம் நன்கொடை வாங்க முயற்சித்தேன். நான் திட்டமிட்ட பிரச்சார செலவினங்களை குறைந்தபட்சமாக குறைக்க முயற்சித்தேன். ஆனால், போதுமான நிதியை திரட்ட முடியவில்லை.


ஆனால், என்னால் சொந்தமாக போதுமான நிதியை திரட்ட முடியவில்லை. கட்சியின் சார்பில் எனக்கு எதுவும் கொடுக்கவில்லை என்பதால் கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், காங்கிரஸின் விசுவாசமான தொண்டராக தொடர்ந்து இருப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.


புரி மக்களவை தொகுதியின் கீழ் வரும் 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தாததால் சுசரிதா மொஹந்தி அதிருப்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றுமாறு கட்சியின் மூத்த தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரின் கோரிக்கைகளுக்கு கட்சி தலைமை செவிசாய்க்கவில்லை. வரும் 25ஆம் தேதி புரி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.