இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை மக்களவை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்க உள்ளது. ஏற்கனவே, இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
தொடர் சர்ச்சையில் சிக்கும் பிரதமர்:
முதல் இரண்டு கட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இன்று, குஜராத் உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி சர்ச்சையாக பேசி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இஸ்லாமியர்கள், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாக பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
"ராமர் கோயிலை பூட்டி விடுவார்கள்"
இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் தாரில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் நினைப்பதாகவும் அதை தடுத்து நிறுத்த பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை காங்கிரஸ் பூட்டாமல் இருக்க பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் பிரதமர் சர்ச்சையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய பிரதமர், "மோடிக்கு 400 இடங்கள் கிடைத்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி புதிய வதந்தியை பரப்பி வருகிறது. வாக்கு வங்கியால் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் புத்திசாலித்தனம் முடங்கியது போல் தெரிகிறது.
2014 முதல் 2019 வரையிலும், 2019 முதல் 2024 வரையிலும், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளின் வடிவில் 400 எம்பிக்களும் ஆதரவு இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு:
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவில் எதிர்கட்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மோசமான முடிவுகளை பெற்றிருக்கிறது. இன்று மூன்றாம் கட்டத்தில் எஞ்சியிருப்பதும் போய்விடும். மீண்டும் மோடி அரசு என நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. ஆனால், இன்று அதன் கூட்டணிக் கட்சி ஒன்று இந்திய கூட்டணியின் நோக்கத்தை உறுதிப்படுத்தியது. தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் இவர்களின் தலைவர், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, இப்போதுதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அவர், இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு வேண்டும். இடஒதுக்கீடு மட்டும் இன்றி முழு இடஒதுக்கீட்டையும் தர வேண்டும் என்கிறார். இதன் பொருள் என்ன? எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினருக்கு உள்ள அனைத்து இடஒதுக்கீட்டையும் பறித்து முஸ்லிம்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்" என்றார்.