காட்சிகள் மாறுது... ஆட்களும் மாறுகின்றனர். இது காலம் காலமாக அரசியல் கட்சிகள் சந்திக்கும் காட்சிகள்தான். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. அதை அதிமுகவின் ஒற்றை தலைமை என்ற சொல் அதை நிரூபித்து வருகிறது. அந்த இடத்தில் தஞ்சையும் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் நேற்று முதல் அவருடன் கூட்டணி... இன்று முதல் இவருடன் கூட்டணி என்று சட்..சட்டென்று காட்சிகள் மாறுவதுதான் காரணம்.
சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோத சம்பவமும் நடந்தது இந்த பொதுக்குழுவில்தான். காரணம் ஒற்றை தலைமை என்ற கோஷம்தான்.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்தான் வரலாற்று (?!) சிறப்புமிக்க அந்த வார்த்தையை கூறினார்... ஆம். அனைத்து தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்படுவதாக சத்தமாக கூறினார்.
அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர். 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக கூறி ஒரு கடிதத்தை சி.வி.சண்முகம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார். ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அளிக்கப்படுகிறது. இரட்டைத் தலைமையோடு திமுக-வை வலுவாக எதிர்த்துப் போராட முடியவில்லை என்று குறிப்பிட்டார். இப்படி ஏகப்பட்ட களேபரங்களுடன் நடந்த பொதுக்குழுவை முடித்துவிட்டு தன் கோட்டை என்று நினைத்து கொண்டிருந்த தஞ்சைக்கு வந்தார் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவும், ஓ.பி.எஸ்.ன் ஆதரவாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம். தஞ்சையில் அவர் அளித்த பேட்டியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறப்பட்டதற்கு மறுப்பும், கண்டனமும் தெரிவித்து சென்றார்.
ஆனால் மறுநாளே அவரது ஆதரவாளர்கள் பலரும் எடப்பாடியாரே ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என்று தஞ்சை மாநகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி அரசியல் அரங்கை அதிர விட்டுள்ளனர். அந்த போஸ்டரில் காவிரி காப்பாளரே... அம்மாவின் உண்மை விசுவாசியே.., எடப்பாடியாரே ஒற்றை தலைமையேற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள் என்ற வாசங்களை பதிவிட்டுள்ளனர். தஞ்சையின் அனைத்து பகுதிகளிலும், சந்து, பொந்துகளில் கூட இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே வைத்திலிங்கத்தின் மிக நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்தவர்கள்தான் தற்போது இப்படி அணி மாறியுள்ளனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அச்சகத் தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணியின் செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் பூபதி என மிக முக்கியமான விசுவாசிகள்தான் இப்படி அணி மாறி எடப்பாடியாரை ஒற்றை தலைமை ஏற்க வரவேற்றுள்ளனர். இது வைத்திலிங்கத்தின் மற்ற ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்