கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக பொதுக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என காமெடி செய்து வருகிறார். எஸ்.பி. வேலுமணியை நினைத்தாலும் தமாஷாக உள்ளது. 23 தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது, எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகிறது எனக் கூறினால், எதற்காக அதனை தயார் செய்ய வேண்டும்?


அங்கு உள்ளவர்கள் சி.வி. சண்முகத்திற்கு பயப்படுகின்றனர். டிசம்பர் 1ம் தேதி செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் 5 வருடம் வரை நீட்டிக்கலாம். அது எம்ஜிஆர்ரால் கொண்டு வரப்பட்ட பைலா. அதனை திருத்தப் போய் தான் தற்பொழுது சர்ச்சை நீடித்து வருகிறது. ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, 11 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்ததற்காக அவரைத் தாக்க முற்பட்டார்களா? அல்லது முதல்வர் பதவியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என அறிவித்ததற்காக அடித்தீர்களா? 


கே.சி. பழனிச்சாமி, புகழேந்தி, அன்வர் ராஜா ஆகியோர் காண்பிக்கும் இடத்தில் எல்லாம் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டவர் பன்னீர்செல்வம். ஒரு வருடத்திற்கும் முன்பே, அனைத்தையும் விட்டுக் கொடுத்தால் தங்களுக்கு செக் வைப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினேன். தற்போது அவ்வாறு நடைபெற்று உள்ளது. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் வரும்பொழுது நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது செயல்பட வேண்டாம். அனைத்தையும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறும் பண்பாடு கிடையாதா? எடப்பாடி பழனிசாமிக்கு தான் புத்தி இல்லை. வேலுமணிக்காவது இருந்திருக்க வேண்டும் தானே? பொதுக்குழுவில் ரஷ்யா, உக்ரைன் போல் அடித்து கொண்டனர். பொதுக்குழு செல்லாது என சிவி சண்முகம் கூறினார். அப்படி என்றால் அவர் எம்.பி.யாக இருக்க முடியாது. பொதுக்குழுவில் எஸ்.பி. வேலுமணி திமுகவிற்கு சவால் விடுகிறேன் என்று கூறியதும், எனக்கு சிரிப்பு வந்து விட்டது.




காவல் துறையும், முதல்வரும் சிறிது ஏமாந்து இருந்தால் ஓபிஎஸ், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் பொதுக் குழுவில் இருந்து திரும்பி இருக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி, பொதுமக்கள் விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தீர்மானங்கள் எழுதி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தூக்கி எறியப்பட்ட முதல் கூட்டம் இதுதான். குழப்பத்தை உண்டாக்கி அனைவரின் பதவியும் போவதற்கு சி.வி.சண்முகம் காரணமாக அமைகிறார்.


பொதுக்குழுவில் முன்னால் மூன்று வரிசைகளில் ரவுடிகளை அமரவைத்து ரவுடிசம் செய்தனர். இதுபோன்ற செயல்களைத் தூண்டி விட்டதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணமாக இருக்க முடியும். 11ம் தேதி பொதுக்குழு கூடாது. ஓபிஎஸ் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக தான் டெல்லி சென்றுள்ளதாக தகவல். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. பொதுக்குழு தீர்மானத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மதிப்புக்கூட்டு வரியை குறைக்காத திமுகவிற்கு கண்டனம் என உள்ளது. ஏன் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது தானே?


16வது தீர்மானத்தில் பிரதம மந்திரிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் என உள்ளது. எதற்காக பிரதம மந்திரிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூற வேண்டும். பொன்னையன் பாஜகவால் தான் அதிமுக அழிகிறது என எதற்கு கூற வேண்டும்? இந்த கட்சியை ஒழிக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டார்கள். இந்த கட்சி ஜாதி கட்சியாக மாறிவிட்டது. ஜெயலலிதா இருந்த பொழுது ஓ.பன்னீர்செல்வத்தை தான் அழைத்து அருகில் அமர வைத்து ஆலோசனை மேற்கொள்வார். என்றைக்காவது பழனிசாமியை அழைத்து ஆலோசனை கேட்டது உண்டா? சசிகலாவின் காலை பிடித்து பதவி பெற்ற இவரது அதிகாரத்தையும் ஆணவத்தை பாருங்கள்.


எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவருக்கும் ஓட்டெடுப்பு நடத்தி தலைமையை நிரூபித்து கொள்ள வேண்டும். எடப்பாடிக்கு கவர் கொடுத்து தான் பவர் வந்தது. எடப்பாடி பழனிசாமி சி.வி. சண்முகத்திற்கு பின்னால் சென்றால், அனைத்தும் ஒழிந்து விடும். சசிகலா அதிமுகவிற்கு வந்தால் நன்றாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.


 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண