இன்று நிகழ்ந்த தஞ்சாவூர் ஆசிரியர் படுகொலை, ஓசூர் வழக்கறிஞர் படுகொலை சம்பவங்களுக்கு இபிஎஸ், செல்வப்பெருந்தகை,அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்ட கட்சி தலைவர்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் படுகொலை:
தஞ்சாவூர் மாவட்டம், சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
ரமணியை, சின்னமனை பகுதியைச் சேர்ந்த மதன்(30) என்பவர் பெண் கேட்டு சென்றிருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தஞ்சை சரக டிஐஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரமணி வீட்டு பெற்றோர்கள், திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இன்று காலை ரமணி பணியாற்றும் பள்ளிக்குச் சென்ற மதன், அங்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசியர் ரமணியின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் ரமணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் - வழக்கறிஞர் படுகொலை:
தஞ்சையில் ஆசிரியை ரமணி பள்ளியின் உள்ளே புகுந்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள், சில மணி நேரத்திலே ஓசூரில் மற்றொரு கொடூரம் அரங்கேறியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் கண்ணன் என்பவரை இளைஞர் ஒருவர் சாலையில் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தார். நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை செய்தவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களும் , ஒரே நாளில் நிகழ்ந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இச்சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினரும் முதலமைச்சர் ஸ்டாலினையும் , தமிழ்நாடு அரசையும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:
இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது , “
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கண்டித்த செல்வப்பெருந்தகை :
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரி்வித்துள்ளதாவது “ தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்திருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது. குற்றவாளிக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது ”தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார், ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இவை திமுக ஆட்சியில், தமிழகத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமற்ற காடாக தமிழகத்தை மாற்றியதற்கு வெட்கப்பட வேண்டும். பிரச்னைகளைத் திசைதிருப்புவதை விட, இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண தேவையில்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு வெட்டு - தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே? முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.