அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு 100 கோடி ரூபாய் கேட்பதாக அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
"கூட்டணிக்கு வருவதற்கு 20 சீட் கொடுங்க, 50 அல்லது 100 கோடி ரூபாய் கொடுங்கு என கேட்கின்றனர். ஆனால், கூட்டணி குறித்து நான் பார்த்து கொள்கிறேன் என இபிஎஸ் கூறிவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்து விட வேண்டாம் என இபிஎஸ் கூறி உள்ளார்" என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேடையில் ரகசியத்தை உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்:
தமிழ்நாட்டில் வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா போராக மாறியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகையை தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
பலமான திமுகவை எதிர்க்க வேண்டுமானால், கட்சி கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதோடு, சரியான கூட்டணி அமைய வேண்டும். அந்த வகையில், திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களவை தேர்தலிலேயே பாமகவை தங்கள் கூட்டணியில் இழுக்க அதிமுக முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில் பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிட்டது. பின்னர், அதிமுக கூட்டணியில் விசிகவை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அதிமுகவுடன் டீல் பேசியது யார்?
ஆனால், கடைசியில் அதுவும் நடக்கவில்லை. சமீப காலமாக, அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக இணைந்து போட்டியிடலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், அதற்கும் தவெக முற்றிப்புள்ளி வைத்துவிட்டது. முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது என தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இணைவதற்கு 100 கோடி ரூபாய் கேட்பதாக அதிமுகவின் மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சோமரசம்பேட்டையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், "கூட்டணிக்கு வருவதற்கு 20 சீட் கேட்கிறார்கள்.
50 அல்லது 100 கோடி ரூபாய் கேட்கின்றனர். ஆனால், கூட்டணி குறித்து நான் பார்த்து கொள்கிறேன் என இபிஎஸ் கூறிவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்து விட வேண்டாம் என இபிஎஸ் கூறி உள்ளார்" என்றார்.