பிரச்னைகளைத் திசைதிருப்புவதை விட, இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை காண தேவையில்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டியுள்ளார்
ஆசிரியர் படுகொலை:
தஞ்சாவூர் மாவட்டம், சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
ரமணியை, சின்னமனை பகுதியைச் சேர்ந்த மதன்(30) என்பவர் பெண் கேட்டு சென்றிருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் ரமணி, மதனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இன்று காலை ரமணி பணியாற்றும் பள்ளிக்குச் சென்ற மதன், அங்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசியர் ரமணியின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் ரமணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் - வழக்கறிஞர் படுகொலை:
தஞ்சையில் ஆசிரியை ரமணி பள்ளியின் உள்ளே புகுந்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் சில மணி நேரத்திலே ஓசூரில் மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் கண்ணன் என்பவரை இளைஞர் ஒருவர் சாலையில் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளார். நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை செய்தவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு:
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது ”தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார், ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இவை திமுக ஆட்சியில், தமிழகத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமற்ற காடாக தமிழகத்தை மாற்றியதற்கு வெட்கப்பட வேண்டும். பிரச்னைகளைத் திசைதிருப்புவதை விட, இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண தேவையில்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
நெருக்கடிக்குள்ளாகும் தமிழ்நாடு அரசு:
கடந்த வாரம் நடைபெற்ற மருத்துவர் மீதான கொலைமுயற்சி தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், ஒரே நாளில் மாணவ மாணவிகளின் கண் முன்னே ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும், நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதும் திமுக அரசுக்கு மேலும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமல, எக்ஸ் வலைதள பக்கத்தில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.