பெரும் ஆளுமைகளின் தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். 8 வது தொடராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து காண்போம்.
கலைஞர் கருணாநிதியின் முதல் தேர்தல், முதல் அண்ணா சந்திப்பு, முதல் முறை முதலமைச்சர் முதல் இறுதி பயணம் வரை சுருக்கமாக குறித்து காண்போம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் முத்துவேலருக்கும் – அஞ்சுகம் அம்மையாருக்கும், 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி மகனாய் பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1938 ஆம் ஆண்டு, தனது 14 வயதில் பள்ளி வகுப்பின்போது, இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். கலைஞர், அண்ணாவை முதன் முதலில் 1942 ஆம் ஆண்டு சந்தித்தார். அந்த சந்திப்புதான் அவரது அரசியல் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது
1949ஆம் ஆண்டு பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, அண்ணா தி.மு.க.வை தொடங்கினார். அப்போது அண்ணாவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர்களில் கலைஞரும் ஒருவர். அப்பொழுது, தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் அரசியல்:
1949ல் திமுக தொடங்கிய போது 25 வயதே நிரம்பியிருந்த அவர், கட்சியின் பிரச்சாரக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதே காலகட்டத்தில், ராஜகுமாரி படத்தில் தொடங்கி சினிமா வசனகர்த்தாவாகவும் கோலோச்சிய கருணாநிதி, வசனம் எழுதிய திரைப்படங்கள் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தமிழகத்தில் வெற்றிகரமாக விதைக்க ஆரம்பித்தன.
1952ல் அவரது வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படங்கள் மூலம் கலைஞர் மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தியா குடியரசானதைத் தொடர்ந்து, 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. 1957ல் நடந்த தேர்தலில் தி.மு.க. முதல் முறையாகப் போட்டியிட்டது.
Also Read: Power Pages-1: Annadurai: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!
முதல் தொகுதி:
அப்போது கலைஞர் கருணாநிதி நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஏனெனில் அவர் பிறந்த திருக்குவளை, அந்த தொகுதியில் தான் இருந்தது. ஆனால் அண்ணா, கலைஞரை குளித்தலை தொகுதியில் போட்டியிடும்படி கேட்டுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அதையடுத்து குளித்தலை தொகுதியில் போட்டியிட்டார். கலைஞருக்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் பரபர்ப்புரை மேற்கொண்டார். அத்தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்றார். 1962ல் தஞ்சாவூர் தொகுதி, 1967ல் சைதாப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1967 ஆண்டில் திமுக முதல் முறையாக ஆட்சியை பிடித்தது, அறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அண்ணா உடல்நலக்குறைவு காரணமாக 1969 ஆண்டு மறைந்ததையடுத்து, அதே ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
1671ல் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1972 ல் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்கினார். இதையடுத்து 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார், அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரானார்.
பதவி விலகல்:
1980ல் அண்ணா நகரில் போட்டியிட்ட கலைஞர், 1983ல் இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.
1984 ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். அதன் காரணமாக 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.
1989 துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு 3வது முறையாக முதலமைச்சரானார். 1991 ஆண்டில் மீண்டும் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார், ஆனால் குடியரசு அரசு ஆட்சி அமலுக்கு வந்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1996ல் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.
1996 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் சாணக்கியராக விளங்கிய கலைஞரின் முயற்சியில், மத்தியில் தி.மு.க. உள்ளிட்ட 13 கட்சிகள் உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது. அப்போது தேவ கவுடா பிரதமரானார்
நள்ளிரவில் கைது:
2001ல் சேப்பாகத்தில் வெற்றி பெற்றாலும், அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 30-07-2001ஆம் நாள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறைக்கு வெளியே போராட்டத்தில் இறங்கிய கலைஞர், அன்றே விடுதலை செய்யப்பட்டார்.
2006 ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் போட்டியிட்டு 5வது முறையாக முதலமைச்சரானார். 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடைசியாக போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில்தான், அதிகபட்சமாக 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் என்ன சிறப்பு என்றால், போட்டியிட்ட எந்தவொரு தொகுதியிலும் தோல்வியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞருக்கு பிரதமர் ஆகவேண்டும் என்கிற ஆசை இல்லையா என்று அவரது மகளும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, கனிமொழி சிரித்தபடியே, ’எனக்குத் தெரிந்து அவரை ஒருமுறை குடியரசுத்தலைவர் பதவிக்கு கேட்டிருக்கிறார்கள். ஆனால், ‘நான் தமிழ்நாட்டை தாண்டி எண்ணாதவன்’ என்று அவர் மறுத்துவிட்டார்’ என்று பதில் சொன்னார்.
கலைஞரின் புலமை:
கலைஞரின் எழுத்தாற்றல், தக்க நேரத்தில் நேர்த்தியாக பேசும் ஆற்றல் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். பிரபாகரன் மறைந்தபோது அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, பிரபாகரன் தப்பித்து வேறு நாடுகளுக்கு சென்றிருக்கக்கூடும் என்ற தகவலும் நிலவியது. நிருபர்கள் கேட்கிறார்கள். ‘சார், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா…’? கலைஞர் யோசிக்கிறார். உடனே ‘மாவீரன் மரிப்பதில்லை’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
1974 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று கோட்டை கொத்தளத்தில் மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை மத்திய அரசிடம் போராடிப் பெற்றுத் தந்தார்.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் மாலை 6.10 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி மறைந்தார். அப்பொழுது மெரினாவில் உடலை அடக்கம் செய்ய, ஆட்சியிலிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மறுத்தது.
நீதிமன்றம் சென்ற திமுகவினருக்கு தீர்ப்பு சாதகமாக அமைந்தது. தீர்ப்பை கண்டு அவரது மகனும் முதலமைச்சருமான ஸ்டாலின், சகோதரி கனிமொழியின் கையை பிடித்து கண்கலங்கினார். கலைஞர் இறப்பிலும் இட ஒதுக்கீட்டில் வென்றார் என திமுகவினர் தெரிவித்தனர். அன்றையதினம் திமுக தொண்டர்கள் எழுப்பிய கலைஞர் வாழ்க என்ற கோசம் இடிமுழங்கியது போல் இருந்தது என்றே சொல்லலாம். அதையடுத்து மெரினா கடற்கரையில் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பத்திரிகையாளர், வசனகர்த்தா, பேச்சாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை வாய்ந்த கலைஞர் கருணாநிதி போன்ற தலைவரை காண்பது அரிது.
Also Read: Power Pages-2: Ambedkar: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?