நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். முதல் தொடராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா குறித்து காண்போம். 


தமிழ்நாட்டில் இன்று வரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் வளராமல் இருப்பதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளே முக்கிய காரணமாகும். இந்த 2 கட்சிகள் உருவாக்கத்துக்கு காரணமாக இருக்கும் அண்ணாதுரைதான் தமிழ்நாட்டு அரசியலின் அஸ்திவாரமாக இன்றும் இருந்து வருகிறார்.


இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாக இருந்தது. சுதந்திரம் அடைந்தது பிறகு முதன்முதலாக 1952 ஆம் ஆண்டு  நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 1967 ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தை உடைத்து, இன்று வரை திராவிட கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்றால் அண்ணாதுரை என்கிற நபர்தான்.


அண்ணாவின் இளமைக் காலம்:




1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த அண்ணாதுரை,  நடராஜ முதலியார் என்பவருக்கும் பங்காரு அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். அண்ணாவின் சிறுவயதிலே தாயார் மறைந்ததையடுத்து, அவரது தந்தை ராசாமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராசாமணிதான் அண்ணாவை வளர்த்து வந்தார்.


பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் மற்றும் அரசியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். கல்லூரி காலங்களில், கல்லூரி பேரவையின் பொதுச் செயலாளராகவும், பொருளாதார பிரிவின் மாணவர் சங்க தலைவராகவும் பதவி வகித்தார்.  படிப்பு முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தாளராக 6 மாத காலம் பணிபுரிந்தார். பின்னர் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.


அரசியல் களம் காணுதல்:


நீதி கட்சியில் சேர்ந்த அண்ணா, 1935 ஆம் ஆண்டு, திருப்பூரில் நடைபெற்ற செங்குந்த இளைஞர் மாநாட்டில் முதல் முறையாக பெரியாரை சந்தித்தார். பின்னர் 1937 ஆம் பெரியாரின் குடியரசு மற்றும் விடுதலை இதழின் துணை ஆசிரியராக சேர்ந்தார்.   1938 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கினார் இராஜாஜி. இதை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பெரியாருக்கு ஓராண்டும் அண்ணாவுக்கு 4 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.




1944 ல் நீதி கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் ஆகிய்வற்றை இணைத்து திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. அப்போது பெரியாருக்கு பெரும் உடந்தையாக இருந்தார் அண்ணா. பெரியார்,அண்ணா உள்ளிட்டோர் ஆங்கிலேயரிடம் திராவிட நாடு என தனி நாடு கோரிக்கை வைத்தபோது நிராகரிக்கப்பட்டதையடுத்து, தனி நாடு கோரிக்கையை கைவிடாமல், தன்னுடைய பத்திரிகைக்கு திராவிடநாடு என பெயர் வைத்தார்.


திமுக உருவாக்கம்:




பெரியாருடன் கருத்து முரண்பாடு காரணமாக, 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்தி, அதன் பொதுச் செயலாளரானார். திமுகவைத் தோற்றுவித்தபோது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் அதற்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்' என்றும் தெரிவித்தார். இதை பெரியார் ஆதரவாளர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். 


தேர்தல் களம்:




1957 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் திமுக களமிறங்கி 15 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றனர். காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற்றார். இரண்டு எம்.பிக்கள் வெற்றி பெற்றனர். ( அப்பொழுது நாடு முழுவதும் மக்களவைக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது).


மூன்றாவதாக 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 50 இடங்களில் திமுக வென்றது, ஆனால் அண்ணா தோல்வியை தழுவினார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் மூலம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.


1963 ஆம் ஆண்டு, 16வது அரசமைப்பு சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. அதனடிப்படையில் பிரிவினைவாத அமைப்புகள் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, தனிநாடு கோரிக்கையை கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கோரிக்கை வைக்கப்பட்டது.


ஆட்சி அமைப்பு:




1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் இறைவனின் பெயரால் பதவி ஏற்காமல், உளமாற உறுதி கூறி பதவி ஏற்றுக் கொண்டனர்.18 ஆண்டுகளுக்கு பின்னர் பெரியாரை நேரில் சந்தித்தார் அண்ணார். அதையடுத்து பெரியாரும் அண்ணவுடன் இருந்த பகையை கைவிட்டார்.


1967 ஜூலை 18ம் தேதி 'மதராஸ் ஸ்டேட்' என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானம் அண்ணாவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் இதற்கான சட்ட முன்முடிவு 1968 நவம்பரில் நிறைவேறியது. இதையடுத்து,  1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி சென்னை மாகாணம் தமிழ்நாடு என மாற்றப்பட்டது.


மறைவு:


அண்ணாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததையடுத்து 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார், சிகிச்சை முடிந்த திரும்பிய அண்ணாவுக்கு 1969 ஆம் ஆண்டு ஜனவரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் பலவீனமாக இருந்த அண்ணா பிப்ரவரி 3 ஆம் தேதி மறைந்தார். அவரது இறுதி பயணத்தில் 1.5 கோடி பேர் பங்கேற்றனர். அந்த நிகழ்வு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.



 


திமுக - அதிமுக ஆதிக்கம்:


அண்ணா இலக்கியம், நாடகம் பத்திரிகை உள்ளிட்ட துறைகளில் ஆரம்ப காலங்களில் பெரும் பங்களிப்பை அளித்த அண்ணா, அதை அரசியல் களத்துக்கு ஏற்ப கச்சிதமாக மாற்றினார். நல்ல தம்பி , வேலைக்காரி உள்ளிட்ட திரைப்படங்களில் ,அண்ணாவின் வசனங்கள் வெகுஜன மக்களை கவர்ந்தது என்றும் அரசியலுக்கு பெரிதும் உதவியது என்றும் கூறப்படுகிறது.


அண்ணா மறைவையடுத்து திமுக கலைஞர் கருணாநிதி வசம் சென்றது. எம்.ஜி.ஆர் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து, 1972 ஆம் ஆண்டு அதிமுக கட்சியை தொடங்கினார். இன்றுவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் தமிழ்நாட்டின் ஆட்சி அரசியலில் அசைக்க முடியாதவர்களாகவும், தேசிய கட்சிகளுக்கு இடம் அளிக்காதவர்களாகவும் வலுவுடன் இருந்து வருகின்றனர்.


தமிழ்நாட்டின் மாநில கட்சிகள் வலுவாக இருப்பதால், பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில், மாநில கட்சிகளின் ஆதிக்கமே இங்கு உள்ளது. திமுக - அதிமுக 2 கட்சிகள் உருவாக்கத்துக்கு காரணமாக இருக்கும் அண்ணாதுரைதான் தமிழ்நாட்டு அரசியலின் அஸ்திவாரமாக இன்றும் இருந்து வருகிறார் என்பதில்லை எந்தவித சந்தேகமில்லை.


Also Read: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?