Congress Protest: வருமான வரி சரியாக செலுத்தவில்லை எனக் கூறி, அபராதத் தொகையாகவும் அதற்கு வட்டியாகவும் 1,823.08 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இதை வரி பயங்கரவாதம் எனக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 


"ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் முயற்சி"


இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீங்கள் நன்கு அறிவீர்கள், இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் முயற்சியை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஒரு மாதத்திற்கும் மேலாக, முக்கிய தேசிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டவிரோத முயற்சி நடந்து வருகிறது.


நேற்று, 1823.08 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித் துறையிடம் இருந்து எங்களுக்கு புதிய நோட்டீஸ் வந்தது. ஏற்கனவே வருமான வரித் துறை எங்கள் வங்கிக் கணக்கில் இருந்து 135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளது.


இப்போது வெளிப்படையாகவே சட்டவிரோதமான, ஜனநாயக விரோத நடவடிக்கையில், வருமான வரித் துறையானது காங்கிரஸ்க்கு எதிராக அதன் அடுத்த திட்டமிடப்பட்ட, கொடூரமான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.


நாடு தழுவிய போராட்டத்தை நடத்தும் காங்கிரஸ்:


வருமான வரித்துறை அநியாயமாக காங்கிரஸ் கட்சியை குறிவைக்கிறது. முறையான காரணமின்றி கடந்த எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வரிப்பதிவுகளை மீண்டும் திறந்துள்ளது. ஆதாரமே இல்லாவிட்டாலும், காங்கிரஸ் நிறைய வரி செலுத்த வேண்டியுள்ளது என்கிறார்கள். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் போல் தெரிகிறது.


ஜனநாயகத்தின் மீதான இந்த மோசமான தாக்குதலையும், முக்கியமான மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் எங்கள் கட்சி மீது வரிப்பயங்கரவாதத்தை சுமத்துவதையும் கருத்தில் கொண்டு, அனைத்து பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளும் (PCCs) நாளை அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


 






நாளை, மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளால் மகண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளது.