தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பிறகு இவர் கடந்தாண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். பின்னர், பா.ஜ.க மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடன் ஏற்பட்ட மோதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பா.ஜ.க.வில் மீண்டும் திருச்சி சிவா:
இந்த நிலையில், அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,” சூர்யாசிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததன் அடிப்படையில் கடந்த 24.11.2022ம் ஆண்டு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்.”
இவ்வாறு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
நெருங்கும் மக்களவைத் தேர்தல்:
இதையடுத்து, அவர் மீண்டும் தமிழ்நாடு பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்க உள்ளார். அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், அ.தி.மு.க.வின் கூட்டணியில் இருந்து கழட்டிவிடப்பட்டதாலும் பா.ஜ.க. தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பல தேர்தல்களை தனித்து சந்தித்த அனுபவம் கொண்டவர்கள் என்பதால் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அவர்கள் சிறு, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் பற்றிய அண்ணாமலையின் கருத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி சேர்வது என்பது தற்போது சாத்தியமற்ற ஒன்று என்பதால், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை பலப்படுத்தும் நோக்கில் கட்சியை வலுப்படுத்த அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையிலே அண்ணாமலை மீண்டும் திருச்சி சூர்யாவிற்கு கட்சியில் பொறுப்பு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Arvind Kejriwal: கைது செய்யப்படுகிறாரா முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்? இந்தியக் கூட்டணியை ஒழிக்க சதி என குற்றச்சாட்டு..
மேலும் படிக்க: Rahul Gandhi: ”தெலங்கானாவில் பிஆர்எஸ் - பாஜக கூட்டணி, ஒரு லட்சம் கோடி கொள்ளை” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு