Rahul Gandhi: நடைபெறும் தெலங்கானா தேர்தல் என்பது  மேட்டுக்குடிகளின் தெலங்கானாவுக்கும், மக்களின் தெலங்கானாவுக்கும் இடையேயான தேர்தல் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். 


தெலங்கானா தேர்தல்:


தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் அமைந்துள்ள தெலங்கானாவில் நடைபெறும் தேர்தல் அதிக கவனம் ஈர்த்துள்ளது. ஆளும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.  இந்நிலையில் தான், கூட்டு மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள கோலாப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பரப்புரை கூட்டத்தில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.


”தெலங்கானா மக்களுக்கான தேர்தல் - ராகுல் காந்தி”


கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ இந்த கூட்டத்தில் பங்கேற்க எனது சகோதரி பிரியங்கா காந்தி வரவிருந்தார். ஆனால் அவரது உடல்நிலை சரியில்லாததால், பிரியங்காவின் வாக்கை நிறவேற்றுவதற்காக எனது சகோதரிக்கு பதிலாக நான் இங்கு வந்துள்ளேன். நடைபெறும் சட்டமன்ற தேர்தலானது, மேட்டுக்குடிகளின் தெலங்கானாவுக்கும், மக்களின் தெலங்கானாவுக்கும் இடையேயானது. ஒருபுறம் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். மற்றொருபுறம் தெலங்கானா மக்கள் நிற்கின்றனர். அதில் உள்ள தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம்.


”ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல்”


மேட்டுக்குடிகளின் தெலங்கானாவில் இரண்டு முக்கிய துரோகங்கள் உள்ளன. அதில் முதலாவது காலேஸ்வரம் திட்டம். இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சி பாஜக உடன் கூட்டணி அமைத்து, தெலங்கானா மக்களின் ஒரு லட்சம் கோடி ரூபாயை சுருட்டியுள்ளது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியான மேதிகட்டா தடுப்பணையின் தூண்கள் சேதமடைந்து நீரில் மூழ்கி வருகின்றன. இந்த திட்டத்தினால் ஏற்பட்ட மாநில அரசின் கடனை அடைக்க, தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் 2040ம் ஆண்டு வரை தலா 31 ஆயிரத்து 500 ரூபாயை செலுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நாகர்ஜுனா சாகர், சிங்கூர், ஸ்ரீராம் சாகர் உள்ளிட்ட அணைகளை காலேஸ்வரம் திட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.


கேசிஆர் ஆட்சியில் விவசாயிகளுக்கு அநீதி:


சந்திரசேகர ராவ் செய்த இரண்டாவது துரோகம் என்பது நிலப்பிரச்னை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், மேட்டுகுடி மக்களுக்கான சந்திரசேகர ராவ் ஆட்சியில் அந்த நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.   இதனால் 20 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.


மூடப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்:


அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்காததால், பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. தெலங்கானாவை சுரண்டுவதற்காக நில வருவாய், மணல் மற்றும் மதுபானம் போன்ற முக்கிய இலாகாக்கள் கேசிஆர் குடும்பத்தின் கீழ் உள்ளன. தெலுங்கானா  மக்களுக்கான ஆட்சியை தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இங்கு மேட்டுக்குடி மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸின் ஆறு உத்தரவாதங்கள் மூலம் அந்தக் கனவை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பாஜக - பிஆர்எஸ் கூட்டணி:


தெலங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இடையேதான் போட்டி என்பது தெளிவாகிறது. பிஆர்எஸ், பாஜக மற்றும் AIMIM இணைந்து செயல்படுகின்றன. நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மற்றும் விவசாயிகள் மசோதாக்கள் போன்றவற்றிற்கு பிஆர்எஸ் பாஜகவுக்கு முழு ஆதரவை அளிக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை வழக்குகள் உள்ள அனைத்து எதிர்க்கட்சி முதலமைச்சர்களையும் பாஜக குறிவைக்கிறது. ஆனால் கேசிஆர் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. 2024ல் தேசிய அளவிலும் பாஜக தோற்க வேண்டும். கேசிஆருக்கு பணம், ஆட்சி மற்றும் ஊடக பலம் இருக்கலாம். ஆனால் உண்மை மக்களிடமும் காங்கிரஸிடமும் உள்ளது. 


 இந்திரா காந்தியின் இக்கட்டான காலங்களில் தெலங்கானா மக்கள் அவருக்கு துணையாக நின்றார்கள். மாநிலங்களில் காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சி அமைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தெலங்கானாவிலும் அதையே செய்வோம். தெலங்கானா மக்களிடம் இருந்து கேசிஆர் கொள்ளையடித்த பணத்தை, மீண்டும் தெலங்கானா மக்களுக்கே காங்கிரஸ் கொடுக்கும்” என ராகுல் காந்தி பேசினார்.