டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, ஆம் ஆத்மி கட்சியை மிக பெரிய நெருக்கடியில் தள்ளியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்த மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்துள்ளது.


சிசோடியாவை தொடர்ந்து, அதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.


இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக இன்று (நவம்பர் 2 ஆம் தேதி) அன்று நேரில் அஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், இதே விவகாரத்தில் கெஜ்ரிவாலை விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று முதலமைச்சர் அர்விந்த் கெஜிர்வால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.


அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து: 



  • கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ், "ஆம் ஆத்மி கட்சியை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கமே மத்திய அரசுக்கு உள்ளது. இதற்காக, பொய் வழக்கை தாக்கல் செய்வது உள்பட அவர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலை சிறைக்கு அனுப்பி, ஆம் ஆத்மி கட்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்" என்றார்.

  • டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா அர்விந்த் கெஜ்ரிவாலை ராஜினாமா செய்யக் கோரினார், தொடர்ந்து பேசிய அவர், "மதுபான ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, ​​முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் இந்த ஊழலில் மன்னன் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தபோது அது உறுதி செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 338 கோடியை எங்கு செலவு செய்தார்கள் என்பதைச் சொல்ல வேண்டும். தங்களை நேர்மையானவர்கள் என்று அழைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவின் முகங்கள் தற்போது வெளிவந்துள்ளன," என பேசியுள்ளார்.

  • முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நவம்பர் 2-ம் தேதி அமலாக்க இயக்குனரகம் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். மேலும்,  மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்த பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், அதனால் தான்  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

  • முதலமைச்சர் கைது செய்யப்பட்டால் கட்சி எவ்வாறு செயல்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சௌரப் பரத்வாஜ், “ அதனை தலைமை தான் முடிவு செய்யும். ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் என அனைவரும் சிறையில் இருந்தால், ஆட்சி சிறையில் இருந்து நடத்தப்படும். இது தான் பாஜக அரசின் ஆசை. இலவச மின்சார, இலவச கல்வி, இலவச குடிநீர் என அனைத்தையும் நிறுத்த வேண்டும் என பாஜக அரசு எண்ணுகிறது, ஆனால் அதனை ஒருப்போது முதலமைச்சர் அர்விந்து கெஜ்ரிவால் அனுமதிக்க மாட்டார்” என பேசியுள்ளார்.  

  • நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ராகவ் சத்தா, “ மத்திய அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ125 வழக்குகளை கையாண்டுள்ளது. அதில் 118 வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியக் கூட்டணியை கண்டு அச்சப்படுகிறது. முக்கிய தலைவர்களை குறிவைத்து கைது செய்வது பாஜகவின் திட்டமாக உள்ளது. அதில் முதல் கட்டம் தான் இந்த நடவடிக்கை” என குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கைதை தொடர்ந்து, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் என்சிபியின் உயர்மட்டத் தலைவர்களை குறிவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.  

  • இந்த நடவடிக்கை தொடர்பாக பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ” அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி செய்வதன் மூலம் யாரும் வாக்களிக்காமல் அவர்களே வாக்களித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான்” என பேசியுள்ளார்.