நேற்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியதுதான் இன்றைய சோஷியல் மீடியாவின் ஹாட் டாப்பிக். நேரடியான அரசியல் கருத்துகள் எதையும் அவர் சொல்லவில்லையென்றாலும் அவர் பேசியது எல்லாமுமே மறைமுகமான அரசியல் பாயிட்டுகள்தான்.
சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ; அரசியல் பேச்சுக்கு காற்புள்ளி
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற சமூக வலைதள சர்ச்சைகளுக்கு காற்புள்ளி வைக்காமல் முற்றுபுள்ளி வைத்து முடித்துவிட்டு, அரசியலுக்கு வருவாரா அல்லது வர மாட்டாரா என்ற பேச்சுக்கு கவனத்தோடு காற்புள்ளி வைத்திருக்கிறார் விஜய். அதில், அப்பா – மகன் என்ற குட்டி கதையை சொல்லி ஆளும் தரப்பையும் சூடேற்றியிருக்கிறார். அதோடு, விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று லியோ வெற்றி விழாவில் அனல்பறக்க பட்டாசை கொளுத்திப்போட்டிருக்கிறார் நடிகர் அர்ஜூன் அதுவும் இப்போது அதே சூட்டோடு சோஷியல் மீடியாவில் பற்றிக் கொண்டு எரிகிறது.
குட்டி கதையில் வரும் குட்டி பையன் உதயநிதியா..?
திமுகவின் எதிர்காலம் உதயநிதிதான் என்ற சாசனம் எழுதப்பட்டுவிட்ட நிலையில், அவர்தான் தன்னுடைய நேரடி அரசியல் எதிரி என்பதை வரித்துக்கொண்டுவிட்ட விஜய், உதய்க்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் தெரிகிறது. அவர் சொன்ன குட்டி கதையில் ’அப்பா சேர்ல உட்காரலாமா இல்ல வேணாமா ? அந்த தகுதி இருக்கா, இல்லையா என்பதெல்லாம் சிறுவனான அந்த மகனுக்கு தெரியாது’ என்று விஜய் பேசியது, உதயநிதி தரப்பை அப்செட் ஆக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர் விஜய் நேரடியாக உதயநிதியையோ திமுக குறித்தோ ஆட்சி பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆனாலும் அவரது மக்கள் இயக்க நடவடிக்கைகள் அனைத்தும் விஜய் அரசியல் எண்ட்ரியை நோக்கியதாகவே இருக்கிறது.
அரசியலுக்கு வருவாரா ? வரமாட்டாரா ? - எழும் மில்லியன் டாலர் கேள்வி
மக்கள் தான் மன்னர்கள், ஆணையிட்டால் முடித்து வைக்கும் தளபதியாக நான் இருக்கிறேன் என்ற விஜயின் பேச்செல்லாம் தேர்தல் அரசியலை மையப்படுத்தியே இருக்கிறது. ஆனால், அவர் இறுதியில் அரசியலுக்கு வருவாரா ? அல்லது ரஜினி மாதிரி பேச்சோடு நிறுத்திக்கொள்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.
2026ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய் முடிவு எடுத்திருந்தால் அதற்கான அதிகாரப்பூர்வமான திட்டவட்டமான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட வேண்டும். இல்லையென்றால், அவர் அரசியலுக்கு வருவதற்கான எடுக்கும் முயற்சிகளில் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். இளைஞரணி, சமூக வலைதள அணி, மகளிரணி, தொழிலாளர் அணி என அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டால் கூட 2026 தேர்தலில் போட்டி என்று அவர் அறிவித்தாலும் மிகப்பெரிய இரண்டு திராவிட கட்சிகளையும் பாமக, பாஜக உள்ளிட்ட பலம் பெறும் கட்சிகளையும் எதிர்க்க முடியாமல் போய்விடும்.
உறுதியான முடிவை தெரிவிக்க வேண்டும்
அதனால், மக்களையும் ரசிகர்களையும் குழப்பாமல் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பதை நடிகர் விஜய் விரைவாக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.