செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய காரணத்தால், அந்த வழக்கின் விசாரணை நாளை 3வது நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சி.வி.கார்த்திகேயன் முன்பு நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.


செந்தில் பாலாஜி கைது:


செந்தில்பாலாஜி வீடு மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்திய பிறகு, கடந்த மாதம் 19-ந் தேதி அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கிருந்து சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில்பாலாஜிக்கு இதயத்தில் பை – பாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. பை பாஸ் சர்ஜரி செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.


மாறுபட்ட தீர்ப்பு:


இந்த சூழலில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி நிஷா பானு, பரத சக்கரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதாவது, நீதிபதி நிஷாபானு வழங்கிய தீர்ப்பில் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் என்றும், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கியுள்ள தீர்ப்பில் சிகிச்சை முடிந்து குணம் அடைந்த பிறகு செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி மனுவை  தள்ளுபடி செய்தனர்.


மூன்றாவது நீதிபதி:


இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதன் அடிப்படையிலே தற்போது, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தலைமையில் நாளை மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. மூன்றாவது நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கப்போகிறார்? என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தற்போது வரும் 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் இலாகா இல்லாத அமைச்சராக மாற்றப்பட்டதும், அவரை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் உத்தரவிட்டதும் என்றும் அடுத்தடுத்து தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Annamalai on Governor: 'ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும்' - அண்ணாமலை பரபரப்பு பேட்டி


மேலும் படிக்க: Minister Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு : பத்தே நாட்கள்தான்.. தேவைப்பட்டால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கலாம்: நீதிமன்றம்