அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகள் நாளுக்கு நாள் பல்வேறு திருப்புமுனையை சந்தித்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றுடன் அதாவது ஜூலை 4-ஆம் தேதி முதல் 10 தினங்களுக்குத்தான் காவேரி மருத்துவமனையில் இருக்க முடியும். அதன் பின்னரும் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் சிறை மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்து கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி காலை சோதனை நடத்தியது தொடங்கி அவர் கைது செய்யப்பட்டது, அதன் பின்னர் அவருக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனை சிகிச்சை, மருத்துவப் பரிசோதனையில் ரத்த நாளங்களில் அடைப்பு, அடைப்பை நீக்க அறுவை சிகிச்சை, இதற்கிடையில், அமைச்சரின் மனைவி தனது கணவர் சட்டவிரோத காவலில் இருப்பதாகக் கூறியும், அவரை மீட்டுத் தரும்படியும் ஆட்கொண்ர்வு மனு தொடுத்தது, அதற்கு அமலாக்கத்துறை பதில் மனு அளித்தது மட்டும் இல்லாமல், அமலாக்கத்துறை சார்பில் தனி வழக்கு என கடந்த மாதத்தில் தமிழ்நாடு அரசியல் பக்கத்தில் பெரும் பேசுபொருளானது.
இது மட்டும் இல்லாமல், அமைச்சரை தகுதி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சியினர் ஆளுநரிடம் முறையிட்டது மட்டும் இல்லாமல், வழக்கு தொடுத்தது, ஆளுநர் திடீரென அமைச்சரை தகுதி நீக்கம் செய்வதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சில மணி நேரங்களில் நிறுத்தி வைப்பதாக மற்றொரு கடிதம் எழுதியதும், தன்னுடைய அமைச்சரை தனது அனுமதி இல்லாமல் தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதலமைச்சர் ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதியதும் பெரும் பரபரப்பைக் கூட்டியது.
இந்நிலையில், இன்று அமைச்சர் தொடர்பான வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வேறு பட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு வழக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவராக உள்ள பரத சக்ரவர்த்தி, இன்றுடன் 10 நாட்களுக்கு மட்டும் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும் எனவும், மேற்கொண்டு சிகிச்சை தேவைப்பட்டால், அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற காவலில் அமைச்சரை விசாரிக்க உத்தரவிட்ட நாளில் இருந்து, அமைச்சரின் உடல்நிலை காரணமாக அமலாக்கத்துறையால் விசாரணை செய்ய முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், அமைச்சர் நல்ல உடல்தகுதிக்கு வந்த பின்னர், அமலாக்கத்துறை விசாரணையைத் தொடரலாம் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தை நாடியதில், உயர் நீதிமன்றம் விசாரித்துக்கொண்டு இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேட்டதுடன், உயர் நீதிமன்றம் விரைவில் மூன்றாவது நீதிபதியை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.