தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசின் இந்த செயலுக்கு அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  மதுபானக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.


இந்த நிலையில், இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,


" தமிழ்நாடு போலி மது, கள்ள மதுவால் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்தததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் ஆகும்.






 


தமிழ்நாட்டில் போலி மது, கள்ள மது உற்பத்தி, விற்பனை இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. அது சாத்தியமானதே. அதை விடுத்து கள்ள மது பாதிப்பை தடுக்க மதுக்கடைகளை திறந்திருப்பதாக முதல்வர் கூறுவது அரசின் தோல்வியையே காட்டுகிறது!






மதுவிலக்கு கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மதுவிற்பனைக்கான பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தப்படுகிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.






கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும். மது அரக்கனின் தீமைகளைத் தடுக்க முழு மதுவிலக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!"






இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க : Kishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது