வலதுசாரி சிந்தனையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடர்பாக அவதூறு பரப்பியதற்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அவருடைய கைது நடவடிக்கை தொடர்பாக பாஜக தலைவர்கள் சிலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோ ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளனர். 


இது தொடர்பாக அண்ணாமலை, "அண்ணா அறிவாலய குடும்பத்தையும், அதன் தலைவர்களையும் விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா?பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு;திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்" எனப் பதிவிட்டுள்ளார். 


 






மேலும் பாஜகவின் காயத்ரி ரகுராம், "திமுக தலைவர்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்ததற்கு கைது செய்வதா? அப்போது ஜனநாயகம் என்ன ஆகும்? உதயநிதி ஸ்டாலின்,ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடி தொடர்பாக தொடர்ந்து பொய் கூறி வருகின்றனர். மேலும் இந்து தர்மம் தொடர்பாகவும் திருமாவளவன் உள்ளிட்டோர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


 






 


அத்துடன் திமுக தலைவர்களும் பிராமணர்கள் தொடர்பாக தொடர்ந்து விரும்பதகாத கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்காமல் ஒரு சாதாரண மனிதன் மீது மட்டும் நடவடிக்கையா? யாரும் கட்டாயப்படுத்தி திமுகவை பிடிக்காதவர்களுக்கு பிடிக்க வைக்க முடியாது. ஒரு போதும் சர்வாதிகாரத்தை ஏற்க முடியாது. என்ன பேச வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தில் உள்ள உரிமை. இந்த கைது  மூலம் இந்துகளை திமுக பயமுறுத்துகிறதா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


 






முன்னதாக கிஷோர் கே சாமியை  153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் சங்கர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.  ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை பற்றி அவதூறாக பேசியதாக கிஷோர் கே சுவாமி மீது வழக்கு உள்ளது. அது குறித்தும் விசாரிப்பதாக சென்னை போலீசார் தகவல் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க: சர்சை... சர்சை... சர்சை மட்டுமே! கிஷோர் கே சுவாமியின் முந்தைய பதிவுகள்!