சேலம் மாநகர் கோட்டை மைதானத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக மொழிப்போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


பொதுக்கூட்டத்தில் முன்னுரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், "நாட்டில் இந்திய எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் போராடி வருகிறது தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கும் வரை இந்திய நுழைய விட மாட்டார்" என பேசினார்.


EV Velu: 'பிரதமர் மோடி எங்களோடு கைகோர்க்க வேண்டும்' -அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.


தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் திராவிடம் பெயரில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடத்த திமுகவிற்கு மட்டுமே தகுதி உள்ளது. மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடத்த அதிமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. மக்களை ஏமாற்றவே அதிமுக மொழிப்போர் தியாகிகள் தினத்தை அனுசரிக்கின்றனர். ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் ஒஸ்தியா 500 ஆண்டுகள் பழமையான இந்தி ஒஸ்தியா? என கேள்வி எழுப்பினார். 


இதையும் படிங்க மக்களே: Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? தனித்துவமாகத் தெரிய டிப்ஸ்!


பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போது வணக்கம் என்று தமிழில் ஆரம்பித்தால் போதுமா உலக அரங்கில் திருக்குறள் சொன்னால் போதுமா? திருக்குறள் இருக்கும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக ஆக்க கூடாதா? என்றார். பிரதமருக்கு தமிழ் பிடிக்கும் என்கிறார். ஆனால் தமிழை ஆட்சி மொழியாக ஆக்க மாட்டேன் என்கிறார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களில் கூட அற்புதமாக தமிழில் அறிவிப்புகள் வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கும் போது விமான ஓட்டிகள் தமிழில் அழகாக பேசுகின்றனர். மலேசியா விமான நிலையத்தில் திரும்பிய இடம் எல்லாம் தமிழில் வாசகங்கள் எழுதி வைத்துள்ளனர். உலகம் முழுவதும் தமிழ் உள்ளது. ஆனால் இந்திய பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி இல்லை என்றார்.



நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனியாக தாய்மொழி உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் பேசுகின்றனர், கேரளாவில் மலையாளம், ஆந்திராவில் தெலுங்கு, கர்நாடகாவில் கன்னடம் என இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு தனித்தனியாக தாய்மொழி உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.


இதையும் படிங்க: Republic Day 2025 : தேசிய கொடியேற்றிய மதுரை ஆட்சியர் ; 3.43 கோடி நலத்திட்ட உதவிகள்... குடியரசு தின விழா கொண்டாட்டம்


அவர்களது தாய்மொழி குஜராத்தி. ஆனால் பீகார், ஒரிசா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் மட்டுமே இந்தி பேசப்படுகிறது. அப்படி இருக்கும் போது ஒரே நாடு ஒரே மொழி என்பது எப்படி சாத்தியம் மோடியின் தாய்மொழி குஜராத்தி ஆனால் இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது எந்த விதத்தில் நியாயம். நியாயமாக பிரதமரும் எங்களுடன் கைகோர்த்து அவரது தாய் மொழிக்காக போராட வேண்டும் என்று கூறினார்.


இந்த கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.