நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி இந்திய குடியரசு தினம் (Republic Day) கொண்டாடப்படுகிறது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றுதான் இந்திய அரசியலமைப்பு இறுதி செய்யப்பட்டது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? இந்தியக் குடிமகன் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? கூடாது? என்பதற்கான அடிப்படை அம்சங்கள் இதில்தான் உருவாக்கப்பட்டன.

குடியரசு நாடாக மாறிய நாள்

இந்திய அரசியலமைப்பு மூலம்தான் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக நாடு, குடியரசு நாடாக மாறியது. இந்த நாள் இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் இந்திய குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பிரதமர் இந்தியக் கொடியை ஏற்றி, முப்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்வார், மாநில வாகனங்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார். மாநிலங்களில் ஆளுநர் இந்தியக் கொடியை ஏற்றி வைப்பார்.

2025ஆம் ஆண்டு பொன்னான இந்தியா: பாரம்பரியம் மற்றும் மேம்பாடு (Swarnim Bharat: Virasat aur Vikas) என்ற கருப்பொருளில் வாகன அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

மாணவர்கள் என்ன பேசலாம்?  Republic Day Speech Topics/ Ideas

இந்த நிலையில் குடியரசு தினத்தை ஒட்டி, பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் ஆகியவை நடத்தப்படும். கொடியேற்றி உரை நிகழ்த்துவதும் நடைபெறும். அந்த வகையில் குடியரசு தினம் குறித்து மாணவர்கள் என்ன பேசலாம்? பார்க்கலாம்.

முதலில் என்ன தலைப்பில் நாம் பேசப்போகிறோம் / எழுதப் போகிறோம் என்பது முக்கியம். அதை சரியாகத் தேர்வு செய்தாலே எப்படிப் பங்களிக்கலாம் என்று உரையைத் தயாரித்துவிடலாம்.

  • வேற்றுமையில் ஒற்றுமை; இந்திய குடியரசின் மகிமை
  • அனைவருக்கும் கல்வி: முற்போக்கு குடியரசுக்கான வழிகள்
  • இந்திய அரசமைப்பு சட்டம் கடந்து வந்த பாதை
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்; இந்திய அரசமைப்பு செய்தது என்ன?
  • டிஜிட்டல் இந்தியா: 21ஆவது நூற்றாண்டில் நாடு கண்ட மாற்றம்
  • இந்திய சுதந்திர வேள்வி;  தமிழ்நாடு கண்ட தன்னிகரில்லா வீரர்கள்

என்பன உள்ளிட்ட தலைப்புகள் தற்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.

குடியரசு தின மாதிரி உரை

’’எல்லோருக்கும் வணக்கம். குடியரசு தினம் என்பது இன்னொரு விடுமுறை நாளில்லை. எண்ணற்ற தியாகிகள் விடுதலைப் போராட்ட வேள்வியில் மடிந்து நமக்கு அளித்த பரிசைப் போற்றிப் பாதுகாக்கும் நாள். நம் அரசமைப்பின் முக்கியத்துவத்தையும் அடிப்படை அம்சத்தையும் அறிந்துகொள்ள வேண்டிய நாள்.

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரமும் பெற்றிருக்கும் உரிமைகளுக்கும் அமலுக்கு வந்த நாளை நன்றியுடன் நினைவுகூர்வோம். அமைதி, நீதி மற்றும் சமத்துவத்தை நோக்கி நம் நாடு பீடுநடை போடுவதை நாம் உறுதி செய்வோம்’’.

’’இந்தியக் குடிமகனின் ஒவ்வொரு குரலும் ஒலிக்கும் வகையிலும் கேட்கப்படும் வகையிலும் இந்திய ஜனநாயகத்தைக் காக்க உருவாக்கப்பட்ட நாளே, இந்திய குடியரசு நாள். இந்த நாளில், ஜனநாயகத்தின் ஒளி வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக வீசுவதை உறுதி செய்வோம்’’.

’’நம் பலமே வேற்றுமையில் ஒற்றுமை. பல்லாயிரக்கணக்கான வேறுபாடுகள், கணக்கே இல்லாத கலாச்சாரங்கள், மதம், இனம், மொழிகளைத் தன்னகத்தே கொண்ட நாடு இந்தியா. இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியன் என்ற ஒற்றைப் புள்ளியில் இனிதாய் இணைந்திருக்கிறோம்.

நம் நாட்டின் அரசமைப்பு, குடியரசுத் தலைவர் முதல் சாதாரண குடிமகன் வரை ஒவ்வொரு தனிநபரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. அந்த அரசமைப்பைக் கொடுத்தது இந்த தினம்தான். இந்த நன்னாளில் நாட்டின் அனைத்துக் குடிமகன்களும் சமத்துவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்வோம்’’.

’’குடியரசு தினம் என்பது கடந்த காலத்தைக் கொண்டாடுவது மட்டுமல்ல, வருங்காலத்தைக் கட்டமைப்பதும்தான். இந்திய இளைஞர்களாகிய நாம்தான் நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல வேண்டும். நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், நீதிம் சமத்துவம், முன்னேற்றம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்ந்து இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்’’.

சிறப்பாகப் பேசுவது எப்படி?

  • இந்திய குடியரசு தினம், அதுசார்ந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் குறித்து நன்றாக அறிந்துகொண்டு, பிறகு பேசுங்கள்.
  • உங்களின் மொழிநடையிலும் உணர்ச்சிகளிலும் தேசப்பற்று பெருகி வழியட்டும்.
  • எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பேசுவது முக்கியம்.
  • குடியரசு தின உரை தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கட்டும்.
  • தலைவர்களின் பொன்மொழியை மேற்கோளாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நிமிர்ந்து நின்று, உரக்க, தெளிவாக, தேசப்பற்றுடன் கருத்துகளை வெளிப்படுத்துங்கள்.