முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்று (டிசம்பர் 4) தான், எனவே இன்றைக்கு நாங்கள் அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறோம் என முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகை தந்தனர்.


”ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்”


பின்னர் செய்தியாளரிடம் பேசிய கே.சி.பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான நினைவு தினம் இன்று (டிசம்பர் 4) தான். எனவே இன்றைக்கு நாங்கள் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறோம். ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி, அதை அமைக்க வலியுறுத்தியவர் ஓ. பன்னீர்செல்வம். எனவே, இவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


”டிசம்பர் 4 ஆம் தேதி மரணம்”


ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று வரையில் அவர்கள் இருவரும் ஆணையத்தின் அறிக்கையை அதில் குறிப்பிட்டுள்ள தேதியை நாங்கள் ஏற்கவில்லை என்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டிலிருந்தாவது உண்மையான நினைவு நாளான டிசம்பர் நான்காம் தேதியை ஜெயலலிதாவின் நினைவு நாளாக கடைபிடிக்க வேண்டும்.









அதேபோன்று, கொடநாடு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணத்தில் முறையான விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4 என்று திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.


Also Read: Anbumani: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேகம் - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி.!


Also Read: மிகப்பெரிய துறைக்கு விரைவில் அமைச்சராகிறார் உதயநிதி - எம்.பி கௌதம சிகாமணி அதிரடி பேச்சு