சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்காட்சியில் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். 


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, "நிர்வாக பணிகளுக்காக சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். இவ்வாறு பிரித்தால் தான் வளர்ச்சி அடையும். கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகியவற்றை ஒரு பிரிவாக பிரிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தொழில் வளர்ச்சி இல்லை, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்டவர்கள் இருப்பதால் இதை பிரித்தால் தான் அனைத்தும் வளர்ச்சி அடையும்.


மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரைந்து நடவடிக்கை எடுத்து நிறைவேற்ற வேண்டும். இந்த ஆண்டு மட்டும் 450 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இவற்றை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு திருப்பி விட்டால் குறைந்தது 100 அடிக்குள் தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகும் என்றார்.



அடுத்த உலக அளவில் 10 ஆண்டுகளில் கடும் வறட்சி உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்தார்.


ஆளுநர் மீது சந்தேகம்:


ஆண்டிற்கு இருபதாயிரம் கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு பணியாற்றினால் தான் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு அடுத்த தலைமுறைக்கு தண்ணீரில் பிரச்சனை இல்லாமல் இருக்கும், இல்லையென்றால் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். சேலம் கெங்கவல்லியில் பள்ளி, கல்லூரிக்கு அருகே டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவிட்டால் நேரடியாக நானே வந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் சட்டமாக்கவில்லை? ஏன் இந்த தாமதம் என்று தெரியவில்லை? உயிர் இழப்பை ஒரு பெரிதாக பார்க்காத ஆளுநர் பற்றி எங்களுக்கு புரியவில்லை. கடந்த 15 மாதங்களில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சூதாட்ட நிறுவனங்கள் தினசரி 100 கோடி முதல் 200 கோடி வரை சம்பாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆளுநர் ஏன் கையெழுத்துயிட வில்லை என்பது எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. எனவே ஆளுநர் கையெழுத்திட வேண்டும், அந்த மசோதாவை கொண்டுவர வேண்டும்.


தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை. அனைவரும் வலியுறுத்திய பிறகு உயர் அதிகாரிகளை முதலமைச்சர் கண்டித்தார். ஆனால் மீண்டும் தற்பொழுது அதே நிலைமை வந்துவிட்டது. போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை மட்டுமே காவல்துறையினர் பிடிக்கின்றனர். அவர்களுக்கு வினியோகம் செய்யும் நபர்களை பிடிப்பதில்லை. இந்தப் பிரிவில் அறுபதாயிரம் காவலர்கள் தேவைப்படும் இடத்தில் 500 காவலர்கள் மட்டுமே உள்ளனர். குறைவாக உள்ள காவலர்களை அதிகரிக்க வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும், போதைப் பொருட்களை வினியோகம் செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் இது முதல்வரின் கடமை மிக மிக அவசியமான ஒன்று என்று கூறினார்.



டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் , முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களையும் கிடங்குகளையும் நவீனமயமாக்கி எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் வறட்சி புதிய நோய்கள் பரவ உள்ளது. இதனால் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்ப்பட உள்ளது. அதன் ஆபத்து குறித்து யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. வன விலங்கள் அழிக்கப்படுகிறது. வன விலங்குகள் வேறு இடத்திற்கு செல்வதால் பல நோய்கள் வருகிறது. ஜி 20 மீட்டிங் 5 ஆம் தேதி நடக்கிறது.


பா.ம.க. தலைமையில் ஆட்சி:


இதில் நான் கலந்து கொள்கிறேன். இந்த கூட்டத்தில் பல கோரிக்கை வைக்க உள்ளேன். பாமக நோக்கம் 2026 தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். வரும் பாராளுமன்ற தேர்தலில் அதற்கான யூகங்கள் வகுக்க உள்ளோம். மக்கள் மனதில் 52 ஆண்டுகள் இரண்டு கட்சிகள் ஆட்சியை பார்த்து விட்டனர். புதிய திட்டங்கள் புதிய அரசியல் திட்டங்கள் வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் வளர்ச்சியை நோக்கி நாங்கள் செல்கிறார்கள். மக்களை பிரிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல இருக்கிறோம். தனிநபர் விமர்சனம் பேச மாட்டேன். நல்லது செய்தால் பாராட்டுவேன்.


சமூக நீதிக்கு போராடுவேன். ஒன்றரை ஆண்டு திமுக ஆட்சி, பல தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். பல நிறை வேற்ற வில்லை. நீட் தேர்வு ரத்தாகவில்லை. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை. மாதா மாதம் மின் கட்டணம கணக்கு எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் கொண்டு வரவில்லை, ராஜஸ்தானில் ஓய்வூதியம் கொண்டு வருவோம் என தெரிவித்து உள்ளனர். இங்கும் பழைய ஓய்வூதியம் கொண்டு வர வேண்டும். தவறுகள் சுட்டி காட்டினால் திருத்தி கொள்கிறார்கள். வீம்புக்காக சொல்ல வில்லை. தமிழக வளர்ச்சிக்காக தெரிவிக்கிறோம் தமிழகம் அமைதியாக உள்ளது. தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.