நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளிட்டு வருகிறோம். 6வது தொடராக 35 ஆண்டுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முரசொலி மாறன் குறித்து காண்போம். 


வி.பி. சிங், கவுடா மற்றும் வாஜ்பாய் உள்ளிட்ட 3 அரசாங்கத்திலும்,  மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த பெருமைக்குரியவர் முரசொலி மாறன். இவரின் 35 வருடங்களுக்கு மேலான நாடாளுமன்ற பணி மற்றும் வாழ்க்கை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.


இளமைக் காலம்:


முரசொலி மாறன், 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி  திருக்குவளையில் பிறந்தவர். சண்முகசுந்தரம் - சண்முகசுந்தரி இணையருக்கு முதல் மகனாக பிறந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் . 2 மகன்களின் ஒருவரான தயாநிதி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மற்றொருவரான கலாநிதி மாறன் திரைப்பட தயாரிப்பாளராகவும் சன் தொலைக்காட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் தந்தை சிவன் பக்தியால் மகனுக்கு தியாகராஜசுந்தரம் என்று பெயரிட்டார். இவர் தாயாரான சண்முகசுந்தரி திமுக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது அக்கா ஆவார்.


இவர் தாய்மாமாவான கருணாநிதி நடத்தி வந்த முரசொலி பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவரும் கருணாநிதி போல் திரைப்படங்களில் கதை வசனம் எழுதி வந்தார். இவர் கதை வசனம் எழுதிய முதல் திரைப்படமான குலதெய்வம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான், இவரை முரசொலி பத்திரிகையுடன் சேர்த்து முரசொலி மாறன் என அழைக்க ஆரம்பித்தார் என்று கூறப்படுகிறது.


அரசியல் களம்:




இவர் திமுக கட்சியுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட தொடங்கினார். 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்று, அண்ணாவின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அப்போது, அண்ணா முதல்வராக பொறுப்பேற்றதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.  அவர், தாம் போட்டியிட்டு வென்ற தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக முரசொலி மாறனை அறிவித்தார்.

அரசியலில் அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டு, 1967ஆம் ஆண்டு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்கிய மாறனின் வேட்பு மனுவை பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, காயிதே மில்லத் ஆகிய மூன்று பெருந்தலைவர்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர். இந்த பெருமை தமிழ்நாட்டில் எவருக்கும் கிடைத்திராத பெருமை.


பின்னர் 1977ஆம் ஆண்டு தொடங்கி 1982ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையின் உறுப்பினராக பதவி வகித்தார். 1983-89ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவைக்கு இரண்டாவது முறையான தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்.


1996ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகவும், 1998ஆம் ஆண்டு நான்காவது முறையாகவும் 1999ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாகவும் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.


Also Read: Power Pages-1: Annadurai: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!


மூன்று அரசுகளிலும் அமைச்சர்:




வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், கவுடா தலைமையிலான மத்திய அரசில் தொழில் துறை அமைச்சராகவும்,வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில்  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். வெவ்வேறு அரசாங்களிலும் 3 முறை அமைச்சரானவர் என்ற பெருமைக்குரியவர் மாறன்.  


இவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி 69வது வயதில் இறந்தார். இவர் இறப்பை தாங்க முடியாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார். பிரதம மந்திரி வாஜ்பாய் மற்றும் பல அரசியல் தலைவர்கள் சென்னையில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். கருணாநிதி அளித்த பல பேட்டிகளில் அவரால் மறக்க முடியாத மரணம் என்று முரசொலி மாறனின் மரணத்தை குறிப்பிட்டு பேசுவார். 


சிறப்புகள்:




பணிகளை தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடிக்க கூடியவர் என்றும், ரயில்நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில், யாரும் தன்னை வரவேற்க, வழியனுப்ப வரவேண்டாம் என்றும் அறிவுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது. முரசொலி மாறன் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்தார் வாஜ்பாய்.


The Rising Sun" என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையையும் உருவாக்கி நடத்தியவர் மாறன். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனர் - உறுப்பினர் மற்றும் அதன் முதலாவது தலைவர் எனும் பதவிகளை வகித்தவர். 1975ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமியின் கலைமாமணி விருது பெற்றவர். மூன்று சிறந்த திரைப்படங்களுக்காக குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ், தமிழ்நாடு அரசின் விருது ஆகியவைகளைப் பெற்றவர்.


Also Read: Power Pages-4: இந்தியாவில் தேர்தலை நடத்த முடியாது என்ற உலக நாடுகள்.. திருவிழா போல் நடத்திய நேருவின் கதை தெரியுமா!


Also Read: Power Pages-2: Ambedkar: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?