காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற விஜயதரணி செயல்பட்டு வந்தார். இதனிடையே கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவரை காங்கிரஸ் கட்சி பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவரிடம் பேச முடியவில்லை என கூறப்பட்டது. மேலும் விஜயதரணி பாஜகவில் இணையப்போவதாகவே கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தது.


இந்த நிலையில் அவர் நேற்று பாஜகவில் இணைந்தார்.  இதனைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். முன்னதாக கட்சி மாறிய அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கூறியிருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதனுடன் சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  






விஜயதரணி பின்னணி


 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியான விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 முறை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இவர் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்ததாக கூறப்பட்டது. அதனோடு தமிழ்நாடு காங்கிரஸில் எந்த முக்கிய பொறுப்பும் விஜயதரணிக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.


இந்த நிலையில் தான் நேற்று மத்திய அமைச்சர் எல்,முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, தனது அடிப்படை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் அகில இந்திய மகளிரணி அணி பொதுச்செயலாளர் என அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியிருந்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயதரணி, ‘பிரதமர் மோடியின் செயல்பாடுகளாலும், திட்டங்களாலும் ஈடுக்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளதாகவும், சிறுவயது முதல் காங்கிரஸ் கட்சியின் அங்கமாக இருந்த நான் பாஜகவில் இணையும் சூழல் வந்துவிட்டது. பாஜகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’ எனவும் கூறி தான் பாஜகவில் இணைந்ததற்கான காரணத்தை தெரிவித்திருந்தார்.