தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் பொழுது, ”காங்கிரஸ் கட்சி தாய் குலம் என்ற அடிப்படையில் விஜயதரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது. விஜயதரணிக்கு முகவரியை கொடுத்தது காங்கிரஸ் கட்சி. சென்னையை சேர்ந்தவராக இருந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை போட்டியிட செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு முழுக்க முழுக்க சுயநலத்தோடு பாஜகவில் விஜயதரணி இணைந்துள்ளார். காங்கிரஸின் கொள்கை வேறு பாஜகவின் கொள்கை வேறு. இரு கொள்கைகளும் ஒரு விதத்திலும் ஒத்துப் போகாது. காங்கிரஸ் கொள்கையை பின்பற்றிய விஜயதரணி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார் என்றால் அது மோசமான செயலாகும். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய விஜயதரணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.


எதிர்க்கட்சி எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் குதிரை பேரம் செய்து எம்எல்ஏக்களை தங்களது இயக்கங்களுக்கு அழைத்துச் சென்று மற்ற எம்எல்ஏக்களை பிடிக்கும் செயலை செய்து வருகின்றனர். கொள்ளை புறமாக செய்யும் பாஜகவின் செயல் தமிழகத்தில் ஒருபோதும் பலிக்காது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜயதரணி வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டால் அவர் டெபாசிட் இல்லாத அளவிற்கு எங்களது கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம். விஜயதரணி வெளியே சென்றதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. கட்சியில் உழைப்பவர்கள் அதிகமாக உள்ளனர். பெண் என்ற முறையில் தான் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு பல எதிர்ப்புகள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவருக்கு மட்டுமே சீட்டு கொடுக்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். அங்கேயாவது அவர் சந்தோஷமாக இருக்கட்டும். கன்னியாகுமரியில் விஜயதரணியின் பருப்பு இனி வேகாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 133 வருடங்களை தாண்டிய பெரிய கடல்.


காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜனநாயகம் வேறு எங்கும் கிடையாது. மத்திய அரசாங்கம் ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகிறது. பல மாநிலங்களில் ஆள் பிடிக்கும் வேலையை நிறைவேற்றி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு சிறப்பாக நடந்து வருகிறது. மாநில கட்சிகளை மதிப்பளித்து இந்தியா கூட்டணியில் தொகுதிகள் வழங்கி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு மத்தியில் உள்ள மோடி அரசை முடிவுக்கு கொண்டுவரும் ஆண்டாக அமையும். ராகுல்காந்தி தலைமையில் நல்லாட்சி அமையும். அகில இந்திய அளவில் தொகுதி பங்கீடுக்கு என அமைக்கப்பட்ட குழு சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் மதிக்கும் வகையில் தொகுதி பங்கீடு அமையும். நெல்லை, தென்காசி உள்ளிட்ட தங்களுக்கு பலம் வாய்ந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. சுமூகமான உறவு இருந்து வருகிறது. நல்ல தொகுதிகள் எங்களுக்கு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாண்டிச்சேரியில் உள்ள தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒன்பதரை ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு வந்து கொண்டு தான் இருக்கிறார். இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மோடி வருகையினால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. மத்திய அரசு தமிழக அரசை முற்றிலும் வஞ்சிக்கிறது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்தியில் உள்ள மோடி அரசு நடந்து கொள்கிறது. மத்திய அரசு தமிழக மக்களை வேண்டும் என்று புறந்தள்ளுகிறது. தமிழக மக்கள் தகுந்த பாடத்தை கொடுக்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியும் வகையில் உள்ள விவி பேட் முறை உள்ளது. புதிய தொழில்நுட்பம் சந்தேகத்தை ஏற்படுத்தும். வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எங்களுக்கும் பெரிய சந்தேகம் உள்ளது. வாக்கு இயந்திரம் மீது சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் சென்று கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.