மயிலாடுதுறை நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் முறையாகச் செயல்படாததாலும், முறைகேடுகள் மற்றும் பராமரிப்பின்மை காரணமாகவும் நகரின் தெருக்கள் எங்கும் கழிவுநீர் பொங்கி வழிந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கழிவுநீர்ப் பிரச்சனையைச் சரிசெய்யத் தவறியதாக கூறி தி.மு.க. நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் இன்று நகராட்சி அலுவலகம் எதிரே பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர்.

Continues below advertisement

19 ஆண்டு காலத் திட்டத்தின் இன்றைய அவல நிலை 

மயிலாடுதுறை நகரில் கடந்த 2006 - ஆம் ஆண்டு, நகரத்தின் சுகாதார மேம்பாட்டுக்காகப் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஆரம்பம் முதலே பல்வேறு முறைகேடுகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் சந்தித்து வருவதாக நீண்ட காலமாகப் புகார் இருந்து வருகிறது.

 

Continues below advertisement

திட்டம் முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்படாததன் விளைவாக, தற்போது நகரின் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே அடைத்துக் கொண்டு, சாலைகள் மற்றும் தெருக்கள் எங்கும் பொங்கி வழிந்து ஆறாக ஓடுகிறது. வீடுகளின் வாசல்கள், பள்ளிகளின் அருகாமை மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கியச் சந்தைகள் என அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி நிற்பது பெரும் அவலமாகியுள்ளது.

பம்பிங் நிலையங்கள் செயலிழப்பு

மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளச் சாக்கடைக் கழிவுநீரைச் சேகரித்து வெளியேற்றுவதற்காக எட்டு இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கழிவுநீர்ச் சேகரிப்பு நிலையங்களில் உள்ள மோட்டார்கள் பல நாட்களாகச் செயலிழந்து கிடப்பதாகவும், இதனால் சேகரிக்கும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், மாதந்தோறும் பாதாளச் சாக்கடை பராமரிப்புப் பணிக்காக நகராட்சி சார்பில் ரூபாய் 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டபோதிலும், எந்தவித முறையான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டியுள்ளனர். கழிவுநீர்க் குழாய்கள், சேகரிப்புத் தொட்டிகள் ஆகியவை முறையாகச் சுத்தம் செய்யப்படாததாலும், பம்பிங் நிலையங்கள் செயலிழந்ததாலும், கழிவுநீர் நிரம்பி வழிந்து, நகரின் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நோய் பரவல் அபாயம் மற்றும் நிலத்தடி நீர் மாசு

கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகளில் இருந்து வெளியேறி நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவும் இந்தக் கழிவுநீர், இறுதியாக நகரின் வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் கலந்து விடுகிறது. இதன் காரணமாக, நகரின் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக மாசடைந்து வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குடிநீர்க் கிணறுகளின் நீர், இந்தச் சாக்கடைக் கழிவுகளால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் எழுந்துள்ளது.

மேலும், திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கும் துர்நாற்றம் வீசும் இந்தச் சாக்கடை நீரால், கொசுக்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் உருவாகி, பொதுமக்களுக்கு ஒவ்வாமை சார்ந்த நோய்கள், தோல் நோய்கள், வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் டெங்கு போன்ற காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற சூழலால் மயிலாடுதுறை நகர் முழுவதும் பெரும் தொற்றுநோய்க் கூடாரமாக மாறும் அபாயம் நிலவி வருகிறது.

அ.தி.மு.க.வின்  ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் முறையாக வெளியேற்ற தவறியதாக கூறி தி.மு.க. நகர மன்ற தலைவர் தலைமையிலான நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், உடனடித் தீர்வு காண வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் வாசலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை 

மாவட்டச் செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "கழிவுநீர்ப் பிரச்சனையைச் சரிசெய்யத் தவறிய தி.மு.க. நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  

மாவட்டச் செயலாளர் எஸ். பவுன்ராஜ் பேசுகையில், "மாதந்தோறும் ரூ.10 லட்சம் செலவிடப்படும் நிலையிலும், நகரின் அடிப்படைச் சுகாதாரத்தை பேணத் தவறியது தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. நிலத்தடி நீர் மாசுபடுவதையும், மக்கள் நோய்வாய்ப்படுவதையும் இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்தப் பிரச்சனைக்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், அ.தி.மு.க. சார்பில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும்," என எச்சரித்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு நிலவியது.