புதுச்சேரி : புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுமதி கோரிய நிலையில் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி இல்லை
புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி த.வெ.க. நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர்.
த.வெ.க. தலைவர் விஜய், மக்களைச் சந்திக்கும் வகையில் பல இடங்களில் 'ரோடு ஷோ' நடத்தி வந்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, அவரது சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் சேலத்தில் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டபோது, காவல்துறை அனுமதி மறுத்ததோடு, ஒரு மாதத்துக்கு முன்பே மனு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த நவம்பர் 26ஆம் தேதி த.வெ.க. நிர்வாகிகள் புதுச்சேரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து மனு கொடுத்தனர்.
இச்சூழலில், கடந்த சனிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு என்.ஆனந்த் வந்தார். டிஜிபி இல்லாததால் திங்கள்கிழமை வருமாறு காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று ஐஜி ஏ.கே. சிங்கிளாவை சந்தித்து விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தருமாறு வலியுறுத்தினார். டிஜிபி, டிஐஜி ஊரில் இல்லை. அவர்கள் நாளை வருவார்கள் நாளை வந்தவுடன் வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் இன்று தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், புதுச்சேரி முதலமைச்சரைச் சந்தித்து அவரிடம் பேசினார். இந்நிலையில், விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐ.ஜி. அஜித் குமார் சிங்கிளா மற்றும் உயர் அதிகாரிகளும், தவெக சார்பில் ஆனந்து, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், “புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி இல்லை. திறந்த இடத்தில் பொது கூட்டம் நடத்த பரிந்துரை செய்துள்ளோம். இடத்தை அவர்களே தேர்வு செய்ய வேண்டும். மேலும், இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி மக்கள் சந்திப்பு நடத்த முடியும்? எனவே தேதியை மாற்றி தள்ளி வைக்க கூறியுள்ளோம்” என புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.